ஜெனிவா, ஜூலை 17 – உலகளவில் எய்ட்ஸ் நோய்க்கு ஆளாகி மரணமடைபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக ஐ.நா. எய்ட்ஸ் கட்டுப்பாடு அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
இது குறித்து ஐ.நா.எய்ட்ஸ் கட்டுப்பாடு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 2013- ஆம் ஆண்டு உலக அளவில் எய்ட்ஸ் நோய் தாக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 15 லட்சமாகும்.
இந்த கணக்கீடு கடந்த காலகட்டங்களைக் காட்டிலும் குறைவான ஒன்றாகவே உள்ளது. மேலும், இந்நோய் கிருமியின் தொற்றுதலுக்கு ஆளானோர் எண்ணிக்கையும் 21 லட்சமாக குறைந்துள்ளது” என்று அறிவித்துள்ளது.
எனினும் அந்த அமைப்பு, 2012-ஆம் ஆண்டைக் காட்டிலும், உலகளவில் எய்ட்ஸ் நோய்க்கான வைரஸுடன் வாழ்பவர்களின் எண்ணிக்கை, 2013-ஆம் ஆண்டில் 35 மில்லியனாக உயர்ந்துள்ளது என்று கூறியுள்ளது.
மேலும், எய்ட்ஸ் நோயை எதிர்த்து போராடுவதற்கான நிதியுதவிகள் அதிகரித்து வந்தாலும், அந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உயிர் காக்கும் மருந்துகள் கிடைப்பதில் இன்னும் குறைபாடுகள் உள்ளன என்று அந்த அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. உலகளவில் ஆப்பிரிக்காவே எய்ட்ஸ் நோயால் மிகவும் பாதிக்கப்பட்ட கண்டமாக திகழ்வது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.