Home அவசியம் படிக்க வேண்டியவை ஒரு மணி நேரம் மட்டுமே மஇகா மத்திய செயலவை கூட்டமா? உறுப்பினர்கள் குமுறல்!

ஒரு மணி நேரம் மட்டுமே மஇகா மத்திய செயலவை கூட்டமா? உறுப்பினர்கள் குமுறல்!

526
0
SHARE
Ad

MIC Logo 440 x 215கோலாலம்பூர், ஜூலை 17 – இன்று நடைபெறுவதாக இருந்த ம.இ.காவின் மத்திய செயலவைக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஒத்தி வைக்கப்பட்ட மத்திய செயலவைக் கூட்டம் எதிர்வரும் 27ஆம் தேதி காலை 9.00 மணிக்கு சிரம்பானில் நடைபெறும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், அதே தேதியில் காலை 10.00 மணிக்கு நெகிரி செம்பிலான் மாநில ஆண்டு பேராளர் மாநாடும்  நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

மத்திய செயலவைக் கூட்டம் முடிந்தவுடன் உறுப்பினர் சிரம்பானிலேயே நடைபெறும் ம.இ.கா மாநிலப் பேராளர் மாநாட்டில் மஇகா மத்திய செயலவை உறுப்பினர்கள் கலந்து கொள்ள ஏதுவாக இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது.

முக்கியத்துவம் வாய்ந்த மத்திய செயலவைக்கு ஒரு மணி நேரந்தானா?

Palanivel-Featureஆக, ம.இ.கா மத்திய செயலவைக்கென ஒதுக்கப்பட்ட நேரம் மொத்தமே ஒரு மணி நேரந்தானா என ஒரு சில மத்திய செயலவை உறுப்பினர்கள் தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

தற்போது ம.இ.காவைச் சுற்றி பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. கட்சிக்கும் உறுப்பினர்களுக்கும் ஒதுக்கப்பட்ட நிலங்கள், எம்.ஐ.இ.டி மற்றும் ஏய்ம்ஸ்ட், என பல்வேறு பிரச்சனைகள் பத்திரிக்கைகளில் அறிக்கை யுத்தங்களாக வெளியிடப்பட்டு வருகின்றன.

மேலும், கடந்தாண்டு நடைபெற்ற கட்சித் தேர்தல்களில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்த சங்கப் பதிவதிகாரி விசாரணை, கோத்தா ராஜா ம.இ.கா தொகுதிக்கான தலைவர் தேர்தல் செல்லுமா என எழுந்துள்ள புகார் குறித்து சங்கப் பதிவகம் மேற்கொண்டு வரும் விசாரணை, போன்ற விவகாரங்களையும் பற்றி விவாதிக்க பல மத்திய செயலவை உறுப்பினர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.

அதோடு, பல்வேறு சமூகப் பிரச்சனைகளும் விவாதிக்கப்பட வேண்டிய நிலைமை இருக்கின்றது. ஆனால், நாடு முழுவதும் இருந்து சிரம்பானுக்கு வரப்போகும் மத்திய செயலவை உறுப்பினர்களுக்கான கூட்டத்திற்கு வெறும் ஒரு மணி நேரம் மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கின்றது.

மூன்று மாதத்திற்கு ஒருமுறைதான் மத்திய செயலவைக் கூட்டம்

கடந்த மத்திய செயலவைக் கூட்டம் காஜாங் இடைத் தேர்தலின்போது மார்ச் மாதத்தில் காஜாங் நகரிலேயே நடத்தப்பட்டது. அப்போதும் இது போன்றே குறுகிய கால நேரத்தில் கூட்டம் நடத்தி முடிக்கப்பட்டதாக, மத்திய செயலவை உறுப்பினர் ஒருவர் செல்லியல் தகவல் ஊடகத்திற்கு தெரிவித்தார்.

ஏறத்தாழ மூன்று மாதம் கழித்து நடைபெறவிருக்கும் இந்த மத்திய செயலவைக் கூட்டத்திற்கும் ஒரு மணிநேரம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் தேசியத் தலைவர் காலத்தில் எத்தனையோ அரசியல் போராட்டங்களுக்கு இடையிலும் மாதம் தவறாமல் மத்திய செயலவைக் கூட்டத்தை நடத்தும் நடைமுறையை சாமிவேலு பின்பற்றி வந்தார்.

ஆனால், இப்போதோ கூட்டங்கள் நடைபெறுவதோ மூன்று மாதத்திற்கு ஒருமுறை – அதிலும் ஒரு மணி நேரம் மட்டுமே நடைபெறுவது – பல மத்திய செயலவை உறுப்பினர்களிடையே கடும் அதிருப்தியைத் தோற்றுவித்துள்ளது.