கோலாலம்பூர், ஜூலை 17 – இந்தியாவின் முன்னாள் துணைப் பிரதமரும், பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான எல்.கே.அத்வானி அடுத்தவாரம் கோலாலம்பூரில் நடைபெறவிருக்கும் 21 -வது அனைத்துலக சிந்தி சம்மேளன் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மலேசியா வருகிறார்.
இந்த நிகழ்வு எதிர்வரும் ஜூலை 25 முதல் 27 -ம் தேதி வரை மூன்று நாட்கள், கோலாலம்பூர் ஜேடபிள்யூ மேரியாட் தங்கும்விடுதியில் நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வை மலேசிய சிந்தி சங்கம் (Sindhi Association of Malaysia) மற்றும் அலையன்ஸ் க்ளோபல் சிந்தி அஸோசியேஷன்ஸ் (Alliance of Global Sindhi Associations) ஆகிய அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்கின்றன.
இது குறித்து மலேசிய சிந்தி சங்கத்தின் தலைவர் டத்தோ ஷா லால்சந்த் ரானாய் கூறுகையில், “21-வது சிந்தி சம்மேளனத்தை நடத்த கோலாலம்பூர் சிறந்த இடம். காரணம் கோலாலம்பூருக்கு அருகில் சிங்கப்பூர், இந்தோனேசியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகளில் ஏராளமான சிந்தி மக்கள் வாழ்கிறார்கள். தென்கிழக்கு ஆசியாவின் மையத்தில் நாம் இருக்கின்றோம்” என்று தெரிவித்துள்ளார்.
“விசிட் மலேசியா 2014” கோட்பாடின் படி, மலேசிய சுற்றுலாத்துறை மற்றும் கலாசாரத்திற்கு ஆதரவளிக்கும் நோக்கில், இந்த நிகழ்வு நடத்தப்படுகின்றது என்றும், ஜூலை 25 -ம் தேதி நடைபெறவிருக்கும் துவக்க விழாவில் சுற்றுலாத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் நஸ்ரி பின் அப்துல் அஸீஸ் கலந்து கொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.