ஜோகூர் பாரு,ஜூலை17- மிக விரைவில் ஜோகூர் நுழைவாயிலைப் பயன்படுத்தி, மலேசியாவிற்குள் வரும் சிங்கப்பூர் வாகனங்களுக்கு வாகன நுழைவு அனுமதி கட்டணம் (VEP ) விதிக்கப்படுவதற்கு அரசாங்கம் முடிவெடுத்துள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் நேற்று அறிவித்துள்ளார்.
இந்த முடிவு குறித்து பிரதமர் துறையின் பொருளாதாரத் திட்டமிடல் பிரிவின் மேற்பார்வையாளரான அமைச்சர் டத்தோஸ்ரீ வாஹித் ஓமாருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் நஜிப் தெரிவித்தார்.
நேற்று ஜோகூர் பெர்சாடா அனைத்துலக மாநாடு மண்டபத்தில் நடந்த ஜோகூர் மக்களுடனான நோன்பு திறக்கும் விழாவில் பேசிய நஜிப், “நான் மாநில அரசாங்கத்திடம் எப்பொழுது இத்திட்டம் அமலாக்கப்படும் என்று சாலை போக்குவரத்துத் துறையிடம் கேட்கும்படி அறிவித்துள்ளேன்”என்று கூறினார்.
மேலும், அரசாங்கம் விரைவில் இத்திட்டம் அமலாக்கப்படும் தேதியை அறிவிக்கும் என்றும் நஜிப் கூறினார்.
“எவ்வளவு நுழைவுக் கட்டணம் விதிக்கப்படலாம் என்பதை ஆலோசித்து வருகின்றோம்.வசூலிக்கப்படும் கட்டணத்திலிருந்து ஒரு பகுதி ஜோகூர் மாநிலத்திற்கு வழங்கப்படும்”என்றும் நஜிப் கூறினார்.