ரோஸிபின், ஜூலை 19 – ஏவுகணை தாக்குதலால் நடுவானில் வெடித்துச் சிதறிய மலேசிய விமானம் எம்எச்17 -ல், உயிரிழந்த பயணிகளின் சடலங்கள் அவ்வளவு உயரத்தில் இருந்து கீழே விழுந்ததை அந்த பகுதி கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கண்டுள்ளார்.
இரினா திபுனோவா என்ற பெண் தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த நேரத்தில், பலத்த சத்தம் ஒன்று கேட்டு வெளியே வந்து பார்த்துள்ளார். அப்போது சடலங்களில் ஒன்று அவர் வீட்டுக் கூரையின் மீது விழுந்துள்ளது.
“பலத்த வெடி சத்தம் ஒன்று கேட்டது. அப்போது வானில் இருந்து பொருட்களும், சடலங்களுக்கு கீழே வந்து கொண்டிருந்தது. அதில் ஒரு பெண்ணின் சடலம் என் வீட்டு சமயலறையின் கூரை மேல் வந்து விழுந்தது” என்று தன் வீட்டு கூரையின் மீது இருந்த அந்த பெரிய ஓட்டையை இரினா காட்டுகிறார்.
இறந்த பெண்ணின் சடலம் இன்னும் அவரது படுக்கையறைக்கு அருகில் தொங்கிக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகின்றது.
இரினாவின் வீட்டில் இருந்து 100 மீட்டர் தொலைவிலுள்ள கோதுமை பயிரிட்டுள்ள நிலத்தில் மேலும் பல சடலங்கள் கிடக்கின்றன.
“அந்த சடலங்கள் அனைத்தும் இங்கு தான் கிடக்கின்றன. அதிகாரிகள் வந்து அதை அப்புறப்படுத்தும் வரை காத்திருக்குமாறு தெரிவித்துள்ளனர்” என்று இன்னும் குரலில் நடுக்கத்தோடு அப்பெண் கூறுகிறார்.