புது டெல்லி, ஜூலை 19 – 2 ஜி அலைக்கற்றை விவகாரம் மட்டுமின்றி மத்திய தொலை தொடர்பு துறையின் முடிவுகள் அனைத்தும் அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு தெரிந்தே எடுக்கப்பட்டன என்று சிபிஐ நீதிமன்றத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா சாட்சியம் அளித்தார்.
2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ராசா, அந்த வழக்கில் தனது தரப்பு சாட்சியாக அவரே ஆஜராகி சாட்சியமளித்து வருகிறார். இதையொட்டி அவர் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிபதி ஷைனி முன்பு ஆஜராகி சாட்சியமளித்தார்.
“கடந்த 2007 முதல் 2011-ஆம் ஆண்டு வரை நான் மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சராக இருந்தேன். அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரம் தொடர்பான அனைத்து முடிவுகளையும் நான் பிரதமரின் கவனத்துக்கு கொண்டு சென்ற பிறகே எடுத்தேன்.
அந்த வகையில் தொலைத் தொடர்பு துறையின் அனைத்து முடிவுகளையும் பிரதமர் அறிவார். அவர் அறியாமல் நான் தன்னிச்சையாக முடிவு எடுத்ததாக கூறப்படுவது தவறு.
2007-ஆம் ஆண்டு நவம்பர் 2-ஆம் தேதி நான் பிரதமருக்கு எழுதியிருந்த கடிதத்தில் அலைக்கற்றை விவகாரம் தொடர்பாக குறிப்பிட்டிருந்தேன். அதே நாளில் பிரதமர் மன்மோகன்சிங்கும் எனக்கு கடிதம் அனுப்பினார்.
அதை தொடர்ந்து அவரை நேரில் சந்தித்து தொலை தொடர்பு முடிவுகள் குறித்து விளக்கினேன். அப்போது எங்களுக்குள் நடைபெற்ற கடித பரிவர்த்தனைகள் அடங்கிய கோப்புகளின் தொகுப்பை போல்டரில் வைத்து அவரிடம் அளித்தேன்.
2 ஜி அலைக்கற்றையை ஏலமின்றி ஒதுக்கீடு செய்வது தொடர்பாக அதிகாரமளிக்கப்பட்ட அமைச்சர்கள் குழு ஆய்வு நடத்துவதற்கு ஆட்சேபம் தெரிவிக்கவே நான் பிரதமரை நேரில் சந்தித்தேன் என்று சிபிஐ தரப்பு கூறுவதில் உண்மை இல்லை. சிலருடைய தனிப்பட்ட சுயலாபத்துக்காகவும், நோக்கத்துக்காகவும் இந்த விவகாரத்தில் பிரதமர் தவறாக வழிநடத்தப்பட்டார்.
அதனால் ஏற்பட்ட குழப்பத்தை தவிர்க்கவே நான் உடனடியாக பிரதமரின் கடிதத்துக்கு பதில் கடிதத்தை 2007-ஆம் ஆண்டு நவம்பர் 2-ஆம் தேதி அனுப்பினேன்” என்று ராசா கூறினார். அப்போது சிபிஐ வழக்கறிஞர் பிரதமருக்கு ஒரே நாளில் இரண்டு கடிதங்களை எழுதியதை நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்கள்.
அப்படி என்றால் அந்த கடிதங்களின் நகல்கள் மத்திய தொலை தொடர்பு துறையின் அனுப்பப்பட்ட கடிதங்கள் பட்டியலில் பதிவு செய்யப்பட்டனவா என்றார். அதற்கு ராசா, நான் பிரதமருக்கு எழுதும் அனைத்து கடிதங்களையும் துறையில் பதிவு செய்து வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.
என்னை பொருத்த வரை பிரதமரிடம் தெரிவிக்க நினைத்ததை அவரிடம் கடிதம் மூலமும் நேரிலும் தெளிவுபடுத்தினேன். அதே சமயம் நான் பிரதமருக்கு அனுப்பி கடிதங்கள் தொலை தொடர்பு துறையில் பதிவு செய்யப்பட்டதா என்பதை என்னால் நினைவுகூர்ந்து பார்க்க முடியவில்லை என்றார் ராசா.