Home அவசியம் படிக்க வேண்டியவை எம்எச்17 பயணியின் ஐபேட் கருவியை மீட்க தற்காப்பு அமைச்சு முயற்சி!

எம்எச்17 பயணியின் ஐபேட் கருவியை மீட்க தற்காப்பு அமைச்சு முயற்சி!

569
0
SHARE
Ad

mh17

கோலாலம்பூர், ஜூலை 21 – கிழக்கு உக்ரைனில் மலேசிய விமானம் எம்எச்17 சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவத்தில், மலேசிய கடற்படை அதிகாரியின் மனைவியும், ஒரு வயது குழந்தையையும், மனைவியின் தங்கையும் பலியாகினர்.

மலேசிய கடற்படையில் உயர்பதவி வகிக்கும் லீ வீ வெங்கின் மனைவி, மலேசியா அறிவியல் பல்கலைக்கழகத்தில் (Universiti Sains Malaysia) விரிவுரையாளராகப் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், ஐரோப்பாவில் ஆண்ட்வெர்ப் பல்கலைக்கழகத்தில் நடந்த கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக தனது மகன் மற்றும் தங்கையுடன் சென்ற அவர், கருத்தரங்கு முடிந்து மலேசியா திரும்பும் போது எம்எச்17 விமானத்தில் வந்துள்ளார்.

#TamilSchoolmychoice

விமானம் விழுந்து நொறுங்கி, அதில் பயணம் செய்த அனைவரும் மரணமடைந்துவிட்டனர் என்ற செய்தி அறிந்த லீ துடிதுடித்துப் போனார்.

இந்நிலையில், லீயின் மனைவி வைத்திருந்த ஐபேட்டில் இருந்து பேஸ்புக் மூலமாக யாரோ தகவல் அனுப்பியுள்ளனர். உடனடியாக மலேசிய தற்காப்பு அமைச்சரான ஹிஷாமுடின் ஹுசைனின் உதவியை நாடிய லீ, தனக்கு வந்த தகவல் குறித்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஹிஷாமுடின் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறுகையில்,“விமானம் விழுந்து நொறுங்கிய இடத்திலிருந்து யாரோ லீயின் மனைவி வைத்திருந்த ஐபேட் கருவியை கண்டெடுத்துள்ளனர். அதில் அவரது பேஸ்புக் கணக்கு திறந்த நிலையில் இருந்துள்ளது. அதை அவர்கள் திறந்து பார்த்துள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

கோலாலம்பூரில் உள்ள உக்ரைன் தூதரகத்திற்கு இந்த தகவலை தான் கூறியுள்ளதாகவும், ஐபேட்டை வைத்திருப்பவர்கள் யார் என்பதை அறிந்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டிருப்பதாகவும் ஹிஷாமுடின் தெரிவித்துள்ளார்.

ஆம்ஸ்டெர்டோம் நகரில் இருந்து கோலாலம்பூர் நோக்கி, கடந்த ஜூலை 17 -ம் தேதி புறப்பட்ட மலேசிய விமானம் எம்எச்17, கிழக்கு உக்ரைன் எல்லையில் கிளர்ச்சியாளர்களால் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி சுட்டு வீழ்த்தப்பட்டது.

இந்த சம்பவத்தில் அந்த விமானத்தில் பயணம் செய்த 298 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.