இஸ்ரேலுக்கும், காஸா முனையை ஆட்சி செய்துவரும் பாலஸ்தீன ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் இடையேயான சண்டை நாளுக்கு நாள் தீவிரம் அடைந்துவருகிறது.
கடந்த 8–ம் தேதி தொடங்கி தொடர்ந்து 10 நாட்கள் காஸா முனை மீது இஸ்ரேல் போர் விமானங்கள் சளைக்காமல் குண்டு மழை பொழிந்து வந்தன.
ஆனாலும் இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் நடத்தி வருகிற ராக்கெட் வீச்சை நிறுத்த முடியவில்லை. இதன்காரணமாக இதுவரை கடல் மற்றும் வான்வழி தாக்குதலை நடத்தி வந்த இஸ்ரேல், தரை வழி தாக்குதலையும் நடத்தி வருகிறது.
இரு தரப்பிலும் போர் நிறுத்துவதற்கான ராஜ்ய ரீதியிலான முயற்சியை எகிப்து, பிரான்ஸ், ஐ.நா.சபை ஆகியவை மேற்கொண்டும் பலன் கிடைக்கவில்லை.
இந்த நிலையில், காஸாமுனையின் வட கிழக்கு பகுதியில் உள்ள ஷெஜையா, ஜெய்தூன், ஜபாலியா பகுதிகளில் நேற்று காலையில் இஸ்ரேல் தரைவழி தாக்குதல்களை நடத்தியது. இதில் 40 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர்.
பலியானவர்களில் ஹமாஸ் தலைவர் ஒருவரின் மகனும் அடங்குவார். ஷெஜையாவில் தெருக்களில் மனித உடல்கள் இறைந்து கிடந்ததாக நேரில் கண்டவர்கள் கூறினர்.
நேற்று மதிய நிலவரப்படி இந்தப் போரில் இதுவரை 389 பாலஸ்தீனர்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் ஒரே நாளில் 62 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த சண்டையில் ஒரே நாளில் அதிகபட்ச உயிர்ப்பலி இதுதான். இஸ்ரேல் தரப்பில் 7 பேர் மட்டுமே கொல்லப்பட்டுள்ளனர். 61 ஆயிரம் பாலஸ்தீனர்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.