கோலாலம்பூர், ஜூலை 22 – பேஸ்புக்கில் 100 மில்லியன் இரசிகர்களை கொண்ட முதல் ஆளாக பிரபல பாப் பாடகி ஷகிரா விளங்குகிறார். தற்பொது நட்பு ஊடகங்களில் அதிக அளவிலான விருப்பங்களையும் அவர் பெற்றுள்ளார்.
கொலம்பியா நாட்டைச் சேர்ந்த பாடகியான ஷகிரா, அண்மையில் நடந்த உலக கிண்ணக் காற்பந்தாட்டத்தின் நிறைவு விழாவில் ஒரு பாடல் பாடி மக்களை பரவசப்படுத்தினார்.
அதன் பின்னர் பேஸ்புக்கில் அவருக்கு இரசிகர்கள் மேலும் பெருகினர்.
இதற்கு முன்னர், பேஸ்புக்கில் 91.9 மில்லியன் மற்றும் 89 மில்லியன் ரசிகர்களைக் கொண்டிருந்த பிரபலங்களான எமினெம் மற்றும் ரிஹானாவை பின்னுக்கு தள்ளி தற்போது முதல் இடத்தில் இருக்கிறார் ஷகிரா.
ஒருவர் பேஸ்புக்கில் எவ்வளவு பிரபலமாக உள்ளார்கள் என்பது அவர்கள் பெறும் விருப்பங்களையும், ரசிகர்களின் எண்ணிக்கையையும் வைத்தே கணக்கிடப்படுகின்றது.
அவ்வகையில், உலக கிண்ணக் காற்பந்தாட்டத்தின் சமயத்தில் பேஸ்புக்கில் மிகவும் மும்முரமாக இருந்த ஷகிரா, நிறைவு விழாவில் பிடிக்கப்பட்ட படங்களை தனது பேஸ்புக் பக்கத்தில் ஏற்றி மில்லியன் கணக்கான விருப்பங்களைப் பெற்றார்.
அவர் கடந்த ஜூலை 13 -ம் தேதி நடந்த உலக கிண்ணக் காற்பந்தாட்டத்தின் நிறைவு விழாவில் உலக கோப்பை பின்னணியிலான லா லா லா (2014 பிரேசில்) பாடலைப் பாடினார்.
இதனிடையே ஷகிரா தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பெருமையாக இருக்கிறது. நட்பு ஊடகங்கள் குறிப்பாக பேஸ்புக், என்னைப் போன்ற கலைஞர்களுக்கும், ரசிகர்களுக்கும் இடையே ஒரு நட்பு பாலத்தை உருவாக்கி இடைவேளியைக் குறைக்க மிகவும் பயன்படுகின்றது”என்று தெரிவித்துள்ளார்.
பேஸ்புக் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாகியான மார்க் ஜுக்கர்பெர்க், “வாழ்த்துகள்! ஒரு அற்புதமான நபருக்கு என்ன ஒரு அற்புதமான அடைவு நிலை”என்று தனது கருத்தை ஷகிராவின் பேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ளார்.
தற்போது ஷகிரா அவருடைய பக்கத்தில் அடிக்கடி அவருடைய மேடை படைப்பின் புகைப்படம்,கானொளி மற்றும் தன் கணவர், மகனுடனான புகைப்படங்கள் என நிறைய பதிவுகளை செய்து வருகின்றார்.
ஷகிரா பல உலக அளவிலான வெற்றி படைப்புகளை தந்துள்ளார். அதில் ஒன்று தான் 2006 -ல் வெளிவந்த, “ஹிப்ஸ் டோன் லாய்” என்ற படைப்பு.
மேலும் அவர் 2003 ஆம் ஆண்டு தொடங்கி யுனிசெஃப்பின் (UNICEF – United Nation’s Children’s Fund) நல்லெண்ண தூதராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.