சென்னை, ஜூலை 23 – ரசிகர்களின் கால்களில் விழுந்து கேட்டுக் கொள்கிறேன் யாரும் திருட்டு டி.வி.டியில் படம் பார்க்காதீர்கள் என்று நடிகர் சூர்யா வேண்டுகோள் விடுத்தார். சூர்யா இரட்டை வேடங்களில் நடித்து, சுபாஷ் சந்திரபோஸ் தயாரிப்பில், லிங்குசாமி இயக்கியுள்ள படம், ‘அஞ்சான்.’
இந்தப் படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா, சென்னை சத்யம் திரையரங்கில் நேற்று காலை நடந்தது. விழா மேடையில், சூர்யாவின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
அவருக்கு தயாரிப்பாளர்கள் சுபாஷ் சந்திரபோஸ், யு.டி.வி.தனஞ்செயன் ஆகிய இருவரும் ஆளுயர மாலை அணிவித்தார்கள். விழாவில், சூர்யா பேசும்போது ரசிகர்களிடம் உருக்கமாக ஒரு வேண்டுகோள் விடுத்தார்.
அதில், “என் பிறந்தநாளையொட்டி ஆயிரம் பேருக்கு மேல் ரத்த தானம் மற்றும் உடல் உறுப்புகள் தானம் செய்ததற்காக ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பிறந்த நாளுக்காக சுவரொட்டிகள் அடித்து பணத்தை விரயம் செய்யாதீர்கள்.
அந்த பணத்தில், சக மனிதர்களுக்கு உதவுங்கள். இல்லாதவர்களுக்கு உதவிகள் செய்து சந்தோஷப்படுத்துங்கள். திருட்டு வி.சி.டி.யில் படம் பார்க்காதீர்கள். உங்கள் கால்களை தொட்டு கேட்கிறேன். ‘சிங்கம்-2′ படத்துக்கு மட்டும் 45 லட்சத்துக்கு மேல் திருட்டு வி.சி.டி.
அடித்திருக்கிறார்கள்,” என்றார். பின்னர் சூர்யா மேடையில் நின்றபடி, குனிந்து ரசிகர்களை நோக்கி வணங்கினார். கேள்வி பதில் பின்னர் அவரிடம் நிகழ்ச்சி தொகுப்பாளர் ரம்யா சில கேள்விகளை கேட்டார். அதற்கு சூர்யா பதிலளித்தார்.
கேள்வி: படத்துக்கு படம் உங்கள் உடற்கட்டு மற்றும் தோற்றத்தை மாற்றி அமைத்துக் கொள்கிறீர்களே, எப்படி?
பதில்: கதாபாத்திரங்களை வடிவமைப்பது இயக்குநர்கள்தான். பாலா, கவுதம் மேனன் போன்ற இயக்குநர்கள் எனக்கான கதாபாத்திரத்தை தங்கள் மனத்திரையில் ஓட்டிப் பார்த்து இருப்பார்கள். அவர்கள் சொல்கிறபடி, தோற்றத்தை மாற்றிக் கொள்கிறேன்.
கேள்வி: ‘அஞ்சான்’ படத்தில் உங்களுக்கு சவாலாக இருந்தது என்ன?
பதில்: இயக்குநர் பாலா அண்ணன் சொல்வார். ‘நடிக்கும்போது திரையில் சூர்யா தெரியக்கூடாதுடா. கதாபாத்திரம்தான் தெரிய வேண்டும்’ என்பார். ‘அஞ்சான்’ படத்தில் கிருஷ்ணா, ராஜுபாய் என 2 கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறேன். இவற்றில் சூர்யா தெரியாமல், அந்த பாத்திரமாக மாறுவது சவாலாக இருந்தது.
கேள்வி: உங்கள் ஜோடியாக நடித்த சமந்தா பற்றி என்ன சொல்கிறீர்கள்?
பதில்: படத்தில், ‘‘ஏக் தோ தீன்” என்ற பாடலை நான் சொந்த குரலில் பாடியிருக்கிறேன். அந்த பாடல் காட்சியை படமாக்கியபோது, சமந்தாவுக்கு நான் இந்தி சொல்லிக் கொடுத்தேன்.
சமந்தா எனக்கு தெலுங்கு சொல்லிக் கொடுத்தார். சமந்தா மிக சாதுர்யமானவர். மிக தெளிவானவர். ஒவ்வொரு நாளும் அவர் எப்போது படப்பிடிப்புக்கு வருவார்? என்று படக்குழுவே காத்திருக்கும்.
வழக்கமா படப்பிடிப்பு தளத்தில் தாடியோடு திரிபவர்கள் கூட சமந்தா வருகிறார் என்றால் அன்று பளபளவென ஷேவ் செய்துவிட்டு வருவார்கள்.
கேள்வி: காதல் பாடல்களை கேட்கும்போது உங்களுக்கு எந்த கதாநாயகி நினைவுக்கு வருவார்? இது இயக்குநர் லிங்குசாமி கேட்ட கேள்வி.
பதில்: அதற்கு பதிலளித்த சூர்யா, ‘அனுஷ்கா’ என்றார்.