ஐதராபாத், ஜூலை 23 – ஆந்திராவில் இருந்து தெலுங்கானா பிரிக்கப்பட்டு புதிய மாநிலமாக உதயமானது. தெலுங்கானா மாநிலத்தின் முதலாவது முதல்வராக சந்திரசேகரராவ் இருந்து வருகிறார்.
தெலுங்கானா மாநிலத்தின் நலனையும், புகழையும் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் பிரபலப்படுத்தும் நோக்கில் 27 வயதான இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா அந்த மாநிலத்தின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன்படி தெலுங்கான மாநில வளர்ச்சி குறித்த பல்வேறு நிகழ்ச்சிகளில் சானியா மிர்சா கலந்து கொண்டு சிறப்பிப்பார்.
தொழிற்சாலை உள்கட்டமைப்பு கார்ப்பரேஷன் சார்பில், ஐதராபாத்தில் நேற்று நடந்த தொழிலதிபர்கள் கருத்தரங்கில் பங்கேற்ற முதல்வர் சந்திரசேகரராவ், தூதருக்கான நியமன கடிதத்தை சானியா மிர்சாவிடம் வழங்கினார்.
அத்துடன் அனைத்துலக டென்னிஸ் போட்டிகளில் தொடர்ந்து சாதிக்க வசதியாக ரூ.1 கோடி ஊக்கத்தொகைக்கான காசோலையையும் சானியாவிடம் அளித்தார். விழாவில் சந்திரசேகரராவ் பேசுகையில்,
“சானியா மிர்சா உண்மையான ஐதராபாத்காரர் என்பதில் தெலுங்கானா பெருமிதமடைகிறது. தற்போது சானியா உலக டென்னிஸ் இரட்டையர் தர வரிசையில் 5-வது இடத்தில் இருக்கிறார். அவர் முதல் இடத்தை பிடிக்க நாங்கள் வாழ்த்துகிறோம்’ என்றார்.