கோலாலம்பூர், ஜூலை 23 – நேற்று மலேசிய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட எம்எச்17 விமானத்தின் இரண்டு கறுப்புப் பெட்டிகளும் பிரிட்டன் விமான விபத்து புலனாய்வு பிரிவிடம், தடவியல் ஆய்விற்காக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாக மலேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ லியாவ் தியாங் லாய் தெரிவித்துள்ளார்.
அனைத்துலக விசாரணை குழுவினரின் ஆய்வு பரிசோதனைக்குப் பின் இரு கறுப்புப் பெட்டிகளும் பிரிட்டனிற்கு அனுப்பப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
பிரிட்டனில் இருக்கும் ஃபார்ன்பொர்க் நகருக்கு அனுப்பபடவிருக்கும் அக்கறுப்புப்பெட்டியின் பாதுகாப்பை உறுதி செய்ய மலேசிய நிபுணர்களும் அனைத்துலக விசாரணைக் குழு உறுப்பினர்களும் உடன் செல்லவிருக்கின்றனர்.
இக்கறுப்பு பெட்டியின் ஆய்வு நெதர்லாந்து தலைமையில் அமைகிறது.
இதனிடையே, கடந்த திங்கழன்று பிரதமர் நஜிப் துன் ரசாக், உக்ரைன் கிளர்ச்சியாளர்களிடம் செய்த ஓர் ஒப்பந்தத்தின் படி, இரு கறுப்புப் பெட்டிகளையும், பேரிடரில் பலியான மலேசியர்களின் உடல்களையும், மலேசியாவிடம் ஒப்படைக்க சம்மதம் தெரிவித்தனர்.
அதன்படி, அவர்கள் நேற்று இரு கறுப்புப் பெட்டிகளையும் மலேசியாவிடம் ஒப்படைத்தனர்.
கடந்த ஜூலை 17 -ம் தேதி, 283 பயணிகள் மற்றும் 15 விமான ஊழியர்களுடன் ஆம்ஸ்டெர்டோம் நகரில் இருந்து கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தை நோக்கி வந்த எம்எச்17 விமானம் கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சியாளர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டது.
இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 298 பேரும் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.