ஈப்போ, ஜூலை 23 – இன்று ஈப்போ, புந்தோங் பகுதியில் இனக் கலவரம் ஏற்பட்டதாக, நட்பு ஊடகங்களில் பரவியுள்ள தகவல்கள் வெறும் வதந்திதான் என்றும் அதில் உண்மை ஏதுமில்லை என்றும் மலேசிய காவல் துறையினர் அறிவித்துள்ளனர்.
பேராக் மாநில காவல் துறை தலைவர் டத்தோ அக்ரில் சானி அப்துல்லா அவ்வாறு எந்த சம்பவங்களும் நடைபெறவில்லை என்றும் தாங்கள் எந்தவித புகாரையும் இதுவரை பெறவில்லை என்றும் கூறியுள்ளார்.
“ஈப்போ எப்போதும் போல் அமைதியாக உள்ளது. எந்தவித அசம்பாவிதமும் இங்கு நடைபெறவில்லை. நடைமுறை வாழ்க்கை இயல்பாகவே இருக்கின்றது. யாரும் அச்சமின்றி வெளியே போய்வரலாம்” என இன்று வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
இதுபோன்று தவறான தகவல்களைப் பரப்புவோர்களுக்கு எதிராக தொடர்பு மற்றும் பல்ஊடக சட்டம் 1998இன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவ்வாறு எடுக்கப்பட்டால், தண்டிக்கப்படுபவர்களுக்கு 50,000 ரிங்கிட் அபராதமும் அல்லது ஓராண்டு சிறைத் தண்டனையும் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படலாம் என்றும் டத்தோ அக்ரில் நினைவுறுத்தினார்.
– பெர்னாமா