கோலாலம்பூர், ஜூலை 25 – மடிக்கணினிகள், திறன்பேசிகள், தட்டை கணினி உட்பட அனைத்து தொழில்நுட்ப கருவிகளும் ஒரே இயங்குதளத்தில் இயங்கினால் தொழில்நுட்பத் துறையில் எத்தகைய புரட்சியாக இருக்கும்? கற்பனையிலும் வியப்பளிக்கும் இத்தகைய புதிய முயற்சியில் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாஃப்ட் இறங்கியுள்ளது.
கடந்த வாரம் மைக்ரோசாஃப்ட்டின் தலைமை நிர்வாக இயக்குனர் சத்யா நாடெல்லா பத்திரிக்கைகளுக்கு அளித்துள்ள பேட்டியில், “கணினிகள், திறன்பேசிகள் உட்பட அனைத்து கருவிகளுக்கான விண்டோஸ் மற்றும் விண்டோஸ் ஆர்டி இயங்குதளங்கள் ஒருங்கிணைக்கப்பட்டதாக உருவாக்கப்பட உள்ளது” என்று அறிவித்துள்ளார்.
கணினிகளுக்கான விண்டோஸின் இறுதி பதிப்பான விண்டோஸ் 8 வாடிக்கையாளர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளிவந்தாலும், குறிப்பிடத்தக்க வரவேற்பினைப் பெறவில்லை. அதேபோல் மைக்ரோசாஃப்ட் கடந்த சில மாதங்களுக்கு முன் அறிமுகப்படுத்திய சர்ஃபேஸ் தட்டை கணினிகளும் பயனர்கள் உபயோகப்படுத்துவதற்கு எளிதாக இல்லை. அதிக விலை உள்ளிட்ட காரணங்களால் பெரிய வரவேற்பினை பெற வில்லை. இதன் எதிரொலியாக அந்நிறுவனம் சமீபத்திய காலாண்டுகளில் பெரிய அளவுக்கு வருவாயை ஈட்டவில்லை.
மேலும், மைக்ரோசாஃப்ட் வரும் காலங்களில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டால் அந்நிலையை சமாளிக்க 18,000 ஊழியர்களை வேலையில் இருந்து வெளியேற்றியது. இந்நிலையில் அந்நிறுவனத்தை மீண்டும் வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்ல வேண்டிய நெருக்கடிக்கு அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாடெல்லா ஆளாகி உள்ளார்.
அதன் பொருட்டு விண்டோஸ் இயங்குத்தளத்தின் அடுத்த பதிப்பான விண்டோஸ் 9 -ஐ, அனைத்து சாதனங்களுக்கும் ஏற்ற ஒன்றாக உருவாக்கி வருவதாக தொழில்நுட்ப பத்திரிக்கைகள் ஆருடங்கள் தெவித்து வருகின்றன. நாடெல்லாவின் சமீபத்திய பேட்டியும் அதனை உறுதி செய்துள்ளது.
எனினும், அனைத்து கருவிகளுக்கும் ஒரே இயங்குத்தளம் எப்படி சாத்தியமாகும் என்று கருதப்படுகின்றது. திறன்பேசிகள் அனைத்தும் தொடுதிரை தொழில்நுட்பத்திலேயே இயக்கப்படுகின்றன. ஆனால் தொடுதிரை கணிப்பொறிகளும், மடிக்கணினிகளும் இன்னும் புழக்கத்தில் இல்லை. எனவே மைக்ரோசாஃப்ட் நிறுவனம் இந்த அடிப்படை வேறுபாட்டை நிறைவு செய்யும் வகையில் எத்தகைய இயங்குதளங்களை உருவாக்கி வருகின்றது என பல்வேறு கேள்விகளையும், எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தி உள்ளது.