அல்ஜியர்ஸ், ஜூலை 25 – நேற்று 116 பயணிகளுடன் மாயமான ஏர் அல்ஜீரி விமானம் வடக்கு மாலி பிரதேசத்தில் விழுந்து நொறுங்கிக் கிடப்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
“பௌலிகெஸி என்ற கிராமம் அருகே விமானத்தின் பாகங்கள் கிடப்பதை மீட்புக் குழுவினர் கண்டறிந்துள்ளனர். விமானம் மொத்தமாக எரிந்து ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றது. அந்த இடத்தில் பயணிகள் யாரையும் மீட்புக்குழுவினர் காணவில்லை. யாரும் இதில் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பு இல்லை” என மீட்புக் குழுவைச் சேர்ந்த உயர் அதிகாரி கில்பெர்ட் டியெண்டெர் கூறியுள்ளார்.
தற்போது விமானத்தின் பாகங்களை மீட்கும் பணி நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ‘சுவிப்ட் ஏர்’ நிறுவனத்துக்கு சொந்தமான இந்த விமானத்தை, ஏர் அல்ஜீரி விமான நிறுவனம் குத்தகைக்கு எடுத்து இயக்கி வந்தது.
இந்நிலையில், சகாரா பாலைவன பகுதிக்கு மேலே நேற்று பறந்து கொண்டிருந்த விமானம் மோசமான வானிலை காரணமாக வேறு பாதைக்கு திருப்பி விடப்பட்டது.
ஆனால், அதன் பின்னர் விமான கட்டுப்பாட்டு அறையில் தொடர்பில் இருந்து விலகி மாயமானது.
இந்த விமானத்தில் பயணம் செய்தவர்களில் 50 பேர் பிரான்சையும், 24 பேர் புர்கினா பாசோவையும், 8 பேர் லெபனானையும், 4 பேர் அல்ஜீரியாவையும், 2 பேர் லக்சம்பர்ககையும், தலா ஒருவர் பெல்ஜியம், சுவிட்சர்லாந்து, நைஜீரியா, கேமரூன், உக்ரைன், ருமேனியா நாடுகளைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்து இருப்பதாக ஏர் அல்ஜீரியா நிறுவனம் நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.