கோலாலம்பூர், ஜூலை 29 – மலேசியாவின் முன்னணி விமான போக்குவரத்து நிறுவனமான மலேசியா ஏர்லைன்ஸ் பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 5 மாதங்களில் மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனம் சந்தித்துள்ள இரு பெரும் பேரிடர்களும் அந்நிறுவனத்திற்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
பொருளாதார ரீதியாகவும் மட்டும் அல்லாது வாடிக்கையாளர்கள் மாஸ் நிறுவனம் மீது வைத்திருந்த நன்மதிப்பு ரீதியாகவும் அந்த நிறுவனம் மிகவும் பின்தங்கி வருகின்றது. உக்ரைன் போராட்டக்காரர்களால் எம்எச் 17 வீழ்த்தப்பட்டது எதிர்பாராமல் நடந்த விபத்தாக மக்கள் ஏற்றுக் கொண்டாலும், மாயமான எம்எச் 370 விமானம் தொடர்பாக இன்னும் முழுத்தகவல்களும், ஆதாரங்களும் வெளிவராத நிலையில், மாஸ் நிறுவனம் பயணிகள் மத்தியில் அவப்பெயரை சந்தித்துள்ளது.
மக்களிடையே இழந்த மதிப்பை மீண்டும் பெறவும், பழைய நிலையை மீட்டெடுக்கவும் மாஸ் நிறுவனம் பெரும் முயற்சிகளை செய்து வருகின்றது. அதன் முதல் கட்டமாக நிறுவனத்தின் பெயரினை மாற்றம் செய்வது மற்றும் மாஸ் விமானங்களின் உலகளாவிய வழிப்பாதைகளை மறுசீரமைப்பு செய்வது போன்றவற்றினை செய்ய இருப்பதாக கூறப்படுகின்றது.
மாஸ் நிறுவனத்தில் தொடங்க உள்ள மாற்றங்கள் தொடர்பாக அந்நிறுவனத்தின் வர்த்தக இயக்குனர் ஹக் டன்லெவி கூறியிருப்பதாவது:-
“இருபெரிய விபத்துகள் நிறுவனத்திற்கு பேரிடியாக இறங்கி உள்ளது. இந்த விவகாரங்களில் இருந்து மாஸ் புத்துயிர் பெற்று எழுவதற்கு முயன்று வருகின்றது. மாஸ் நிறுவனத்தில் பெரும் பங்கு வகிக்கும் மலேசியா அரசு, நிறுவனத்தில் செய்ய வேண்டிய எதிர்கால மாற்றங்கள் தொடர்பான ஆய்வுகளை ஏற்கனவே தொடங்கிவிட்டது.”
“மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனம் மீண்டு எழுவதற்கான அனைத்து சாத்தியக் கூறுகளையும் ஆராய்ந்து வருகின்றோம், விரைவில் அதற்கான செயல்முறைகள் தொடங்கப்படும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஹக் டன்லெவி கூறியுள்ள சாத்தியக் கூறுகளில் அந்நிறுவனத்தின் பெயர் மாற்றமும் ஒன்று என மாஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.