கோலாலம்பூர், ஜூலை 30 – முன்னணி நட்பு ஊடகமான பேஸ்புக், விரைவில் தனது ‘மெசெஞ்ஜர்’ (Messenger) செயலியை பயனர்கள் மத்தியில் கட்டாயமாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் வந்துள்ளன.
பயனர்கள் மத்தியில் தகவல் பரிமாற்றத்திற்கும், அளவலாவல்களை ஏற்படுத்தவும் உருவாக்கப்பட்ட பேஸ்புக் இன்று இன்றியமையாத பயன்பாடாக மாறி வருகின்றது. பல்வேறு மாற்றங்களை சந்தித்து, பயனர் நிறைவு கொள்ளும் செயலியாக உருபெற்றுள்ள பேஸ்புக், தனது பயன்பாடுகளில் மேலும் சிற்சில மாற்றங்களை செய்து வருகின்றது.
திறன்பேசி பயனர்கள், பேஸ்புக் வலைபக்கத்திற்குச் செல்லாமல் குறுந்தகவல்களைப் பெறவும், அனுப்பவும் பயன்படும் பேஸ்புக் மெசெஞ்ஜர் செயலியை இன்னும் சில நாட்களில் கட்டாய பதிவிறக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக பேஸ்புக் நிறுவனம்’அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இது பற்றி பேஸ்புக் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பயனர்கள் திறன்பேசிகளில், தங்கள் பேஸ்புக் கணக்கினை நேரடியாக வலைதளத்திற்கு சென்றோ அல்லது பேஸ்புக் மெஸ்செஞ்ஜர் செயலியின் மூலமாகவோ அணுக முடியும் என்ற நிலையை மாற்றி தகவல் பரிமாற்றத்திற்கு பேஸ்புக் மெசெஞ்ஜர் செயலி கட்டாய பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்ற நிலைக்கு கொண்டுவர முயன்று வருகிறோம்” என்று கூறியுள்ளார்.
பேஸ்புக் மெசெஞ்ஜர் செயலியில் குறுந்தகவல் பரிமாற்றம் மட்டும் அல்லாது, ஒலி ஒளித் துணுக்குகள் பரிமாற்றம், ‘க்ரூப் சேட்’ (Group Chat), படங்கள் பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன.
மெசெஞ்ஜர் செயலிகள் மூலமாக பயனர்கள் தங்கள் கணக்கில் வெளியாகும் குறுந்தகவல் பற்றிய ‘அறிவிப்புகள்’ (Notification)-ஐ அறிந்து கொள்ள முடியும், எனினும் அந்த அறிவிப்புகளுக்கும், குறுந்தகவல்களுக்கும் மறுமொழி அனுப்ப, மெஸ்செஞ்ஜர் செயலியை வலைத்தளப் பக்கத்திற்கு சென்று திறப்பது போன்று பயனாளர் பெயர் மற்றும் கடவுச் சொல் கொண்டே திறக்க வேண்டும்.
இரண்டு வழிமுறைகளுக்கும் பெரிய வேறுபாடு ஒன்றும் இல்லை என்பதே அடிப்படை பயனர்களின் கேள்வியாகும். இவற்றில் பேஸ்புக் நிறுவனம் எத்தகைய மற்றங்களைக் கொண்டுவரும் என்பதற்கு சிறிதுகாலம் காத்திருக்க தான் வேண்டும்.