சென்னை, ஜூலை 30 – இஸ்லாம் மதத்துக்கு மாறிய பிறகு முதல் முறையாக ரம்ஜான் பண்டிகையை குடும்பத்தினருடன் கொண்டாடி மகிழ்ந்தார் யுவன் சங்கர் ராஜா.
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜா, நூறு படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். இசைஞானி இளையராஜாவின் இளைய மகன் இவர்.
தற்போது சூர்யா நடிப்பில் வெளியாகவிருக்கும் ‘அஞ்சான்’ படத்திற்கு இவர் இசையமைத்துள்ளார். மேலும் இவரது இசையில் ‘தரமணி’, ‘வை ராஜா வை’, ‘வானவராயன் வல்லவராயன்’ ஆகிய படங்கள் வெளிவரவிருக்கின்றன.
சூர்யாவின் அடுத்த படமான “மாஸ்-க்கும்” யுவன்தான் இசை. யுவன் சங்கர் ராஜா திடீரென சமீபத்தில் இஸ்லாம் மதத்தை பின்பற்றுவதாகவும், அதில் தனக்கு நிம்மதி கிடைத்திருப்பதாகவும் அறிவித்தார்.
இந்த முடிவிற்கு இளையராஜா உள்ளிட்ட தன் குடும்பத்தினர் ஆதரவு தருவதாகவும் அவர் குறிப்பிட்டார். பலருக்கும் அவரது இந்த அறிவிப்பு அதிர்ச்சியளித்தது. மசூதிக்கு செல்வது, தொழுகை செய்வது என்று இஸ்லாம் மத வழக்கங்களுக்கு முழுமையாக மாறிவிட்டார் யுவன்.
இந்த ஆண்டு யுவனுக்கு முதல் ரம்ஜான் பண்டிகை ஆகும். நேற்று யுவன் சங்கர் ராஜா, காலையில் மசூதிக்கு சென்று தொழுதுவிட்டு, வீட்டுக்கு வந்ததும் தன் குடும்பத்தினர் அனைவருக்கும் பிரியாணி விருந்தளித்தார்.
இதில் யுவன் சங்கர் ராஜாவின் அண்ணன் கார்த்திக் ராஜா, சகோதரிகள் பவதாரிணி, வாசுகி, சகோரதரர்கள் வெங்கட் பிரபு, பிரேம்ஜி உள்பட உறவினர்கள் கலந்து கொண்டனர்.