வாஷிங்டன், ஜூலை 31 – இந்தியா, அமெரிக்கா இடையேயான உறவு முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், இரு நாடுகளுக்கிடையேயான உறவினைப பலப்படுத்துவதற்கான நேரம் நெருங்கியுள்ளது என்றும் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி தெரிவித்துள்ளார்.
வாஷிங்டனில் கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற கருத்தரங்கம் ஒன்றில், இது பற்றி அவர் கூறியதாவது:- “இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தொலை நோக்கான சிந்தனையும், மற்ற நாடுகல்லுடனான உறவினை மேம்படுத்துவதற்கான சகிப்புத்தன்மையும் அமெரிக்காவை வெகுவாக கவர்ந்துள்ளது.
அவரின் ‘அனைவருடனும், அனைவரின் வளர்ச்சிக்காகவும்’ என்ற திட்டத்திற்கு ஆதரவளிக்க அமெரிக்கா விரும்புகின்றது.” “அதற்கேற்ப, இந்தியாவின் பொருளாதாரமும் வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடுகளால் புத்துயிர் பெற்று வருகின்றது.
அதில் முக்கிய பங்கினை அமெரிக்க நிறுவனங்களும் வகிப்பது பெருமைக்குரியதாகும்.” “இந்தியாவுடனான நம் நட்புறவில் சிறந்த மாற்றங்களை ஏற்படுத்த வேண்டிய நேரம் தற்சமயம் நெருங்கிவிட்டது.”
“இந்தியாவில் மிகச் சிறந்த மாற்றத்தையும், சீர்திருத்தங்களையும் ஏற்படுத்துவதற்காகவே பெரும்பான்மையுடன் வெற்றியுடன் புதிய அரசு பொறுப்பேற்றுள்ளது.”
“அமெரிக்காவும், இந்தியாவும் இந்த நூற்றாண்டின் தவிர்க்க முடியாத நட்பு நாடுகளாகும். உலகின் மிகப் பெரிய பிரச்னைகளைத் தீர்க்க நமது நட்புறவு சீரிய சிந்தனைகள் அவசியமானதாகும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.