Home நாடு கெடா மஇகா கூட்டம் – ஆண்டுக்கு ஒரு முறை கூட கலந்து கொள்ள தேசியத் தலைவருக்கு...

கெடா மஇகா கூட்டம் – ஆண்டுக்கு ஒரு முறை கூட கலந்து கொள்ள தேசியத் தலைவருக்கு நேரமில்லையா? – பேராளர்கள் அதிருப்தி

575
0
SHARE
Ad

MIC Logo 440 x 215சுங்கைப்பட்டாணி, ஆகஸ்ட் 2 – மஇகாவின் அமைப்பு முறையில் மிக முக்கிய அங்கம் வகிப்பவை மாநிலப் பேராளர் மாநாடுகள்.

ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்தப் பேராளர் மாநாடுகளில் அனைத்து தேசிய நிலைத் தலைவர்களும் கலந்து கொள்ள முனைப்பு காட்டுவார்கள்.

காரணம், எல்லாப் பேராளர்களையும் ஒரே இடத்தில், ஒட்டு மொத்தமாக ஆண்டுக்கு ஒரு முறை நேரடியாக சந்தித்து அளவளாவிக் கொள்ளலாம் – தங்களின் அரசியல் தொடர்புகளை வலுப்படுத்திக் கொள்ளலாம் – என்ற நோக்கம்தான்!

#TamilSchoolmychoice

டத்தோஸ்ரீ ச.சாமிவேலு தேசியத் தலைவராக இருந்த காலத்தில், ஒவ்வொரு ஆண்டுப் பேராளர் கூட்டத்தையும், ஒரு முக்கிய நிகழ்வாக –  முடிந்தவரையில் ஒவ்வொரு தடவையும் நேரடியாக கலந்து கொண்டு – அவர் நடத்தி வைப்பார்.

மஇகா மரபுப் படி தேசியத் தலைவர்தான் ஒவ்வொரு மாநிலப் பேராளர் மாநாட்டையும் உரையாற்றி திறந்துவைப்பார்.

புறக்கணிக்கப்பட்ட கெடா மாநிலக் கூட்டம்

Feature-Palanivel-1இந்த நிலையில் நேற்று சுங்கைப்பட்டாணியில் நடந்து முடிந்த மஇகா கெடா மாநிலத்தின் ஆண்டுப் பேராளர் கூட்டம் பல புறக்கணிப்புகளுக்கு உள்ளாகியிருக்கின்றது.

முதலாவதாக, தேசியத் தலைவர் பழனிவேல் கெடா மாநிலக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. வெளிநாடு சென்று விட்டதாக காரணம் கூறப்பட்டிருக்கின்றது.

தேசியத் தலைவருக்கு நேரமில்லை என்றால் – அல்லது அதைவிட முக்கிய பணிகள்  இருக்கின்றன என்றால் – அந்த மாநிலப் பேராளர் மாநாட்டை வேறு ஒரு தேதிக்கு ஒத்திவைப்பதுதான் முறை.

அல்லது திடீரென ஏதாவது அசம்பாவிதம் என்றால் தேசியத் தலைவருக்கு பதிலாக தேசியத் துணைத் தலைவர் மாநிலப் பேராளர் மாநாட்டை உரையாற்றி திறந்து வைக்கலாம்.

ஆனால், தேசியத் துணைத் தலைவர் டாக்டர் சுப்ரமணியமோ, பிரதமருடனான குழுவில் இணைந்து தற்போது நெதர்லாந்து சென்றுள்ளார்.

சுகாதார அமைச்சர் என்ற முறையில் எம்எச் 17 பயணிகளின் சடலங்கள் மீதான அடையாளம் காணும் பரிசோதனை – சடலங்களை மலேசியாவுக்கு கொண்டு வருதல் போன்ற முக்கிய பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் பேச்சு வார்த்தைகளில் அவர் பிரதமருடன், சுகாதார அமைச்சர் என்ற முறையில் கலந்து கொள்ள வேண்டிய கட்டாய சூழ்நிலையில் இருக்கின்றார்.

இது குறித்து கருத்துரைத்த கெடா மாநில மஇகா பேராளர்களில் சிலர் “தேசியத் தலைவருக்கும், துணைத் தலைவருக்கும் வேறு பணிகள் உள்ளதென்றால் முதல் வேலையாக கெடா மாநிலக் கூட்டத்தை ஒத்திவைத்திருக்க வேண்டும். செப்டம்பர் மாதம் வரை மாநிலக் கூட்டங்கள் நடைபெறுவதால், கெடா மாநிலக் கூட்டத்தையும் ஒத்தி வைப்பதால் எந்த நஷ்டமும் ஏற்படப் போவதில்லை. தேசியத் தலைவரும் துணைத் தலைவரும் கலந்து கொள்ள முடியவில்லை என்றால் பின் ஏன் கூட்டம் நடத்துகின்றார்கள்? இது மாநிலத்தை அவமதிப்பது போல் உள்ளது. அதோடு, முழு அமைச்சர்களாக இருக்கும் தேசியத் தலைவரிடமும், துணைத் தலைவரிடமும் கேள்விகள், பிரச்சனைகள் சிலவற்றை எழுப்ப பேராளர்கள் ஆர்வமாக இருந்தனர். அந்த வாய்ப்பும் பறிபோய்விட்டது. இனி ஒருவருடம் இவர்களையெல்லாம் மீண்டும் பார்க்க காத்திருக்க வேண்டுமா? ஆண்டுக்கு ஒருமுறை கூட எங்களையெல்லால் பார்க்கவும், எங்கள் பிரச்சனைகளைக் கேட்கவும், மாநிலக் கூட்டத்தை நடத்தவும் தேசியத் தலைவருக்கு நேரமில்லையா” என தங்களின் அதிருப்தியைத் தெரிவித்துள்ளனர்.

சோதிநாதன் திறந்து வைத்ததால் சரவணன் அணியினர் புறக்கணிப்பு

sothi2இதற்கிடையில், தேசியத் தலைவரும் துணைத் தலைவரும் கலந்த கொள்ள முடியாத கெடா மாநிலக் கூட்டத்தை ம.இ.காவின் முதல் நிலை உதவித் தலைவர் டத்தோ எஸ்.சோதிநாதன் திறந்து வைத்து உரையாற்றியிருக்கின்றார்.

டாக்டர் சுப்ரமணியம் கலந்து கொள்ளவில்லை என்பதால், அவருக்கு நெருக்கமான அரசியல் ஆதரவாளர்கள் பலர் கெடா மாநில மாநாட்டை தவிர்த்து விட்டனர்.

அதே வேளையில் சோதிநாதன் திறந்து வைக்கும் மாநாடு என்பதால் மற்றொரு தேசிய உதவித் தலைவரான டத்தோ சரவணனும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளாமல் தவிர்த்து விட்டார்.

அண்மையில் தனக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவைக் காரணம் காட்டி அவர் கெடா மாநில மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் சரவணன் கலந்து கொள்ளாததன் உண்மையான காரணம் சோதிநாதனைப் புறக்கணிப்பதுதான் என அவருக்கு நெருங்கிய அரசியல் வட்டாரங்கள் கோடி காட்டியுள்ளன.

saravanan2-M-1சிரம்பானில் உள்ள மாநில மஇகா கட்டிடத்தில் ‘நாம்’ கூட்டத்திற்கு சோதிநாதன் அனுமதி அளிக்காதது சரவணன் ஆதரவாளர்களிடையே கடும் எதிர்ப்பை கிளப்பியிருக்கின்றது.

அதோடு,‘நாம்’ அமைப்பு மஇகா மத்திய செயலவையின் அங்கீகாரத்தைப் பெறாத ஓர் அமைப்பு என்பதால் அதன் கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் என்ற முறையில் தான் அனுமதி அளிக்கவில்லை என சோதிநாதன் நடந்து முடிந்த நெகிரி செம்பிலான் மாநில மாநாட்டில் தெரிவித்திருந்தார்.

இந்தக் கருத்துக்கும் சரவணன் ஆதரவாளர்கள் சிலர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இதுபோன்ற காரணங்களால், சோதிநாதன் திறந்து வைத்த கெடா மாநிலப் பேராளர் மாநாட்டை சரவணன் சார்பு அரசியல் சகாக்கள் பலர் கலந்து கொள்ளாமல் புறக்கணித்து விட்டனர்.

இதனால், பல முக்கிய தலைவர்கள், மற்ற மாநில மஇகா பிரமுகர்கள் யாரும் கலந்து கொள்ளாமல் கெடா மாநிலக் கூட்டம் ஏதோ நடத்துகின்றோம் என்ற பாணியில் – பல புறக்கணிப்புகளோடு நடந்து முடிந்திருக்கின்றது.