வாஷிங்டன், ஆகஸ்ட் 2 – உலக வர்த்தக அமைப்பின் வரலாற்று சிறப்பு வாய்ந்த வர்த்தக ஒப்பந்தம், இந்தியா நிலைப்பாட்டினால் தோல்வியில் முடிந்துள்ளது என அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அமெரிக்க வர்த்தக துறையின் அதிகாரி மைக் புரோமேன் கூறுகையில், “ஜெனிவாவில் உலக வர்த்தக அமைப்பினால் கொண்டுவரப்பட்ட வர்த்தக ஒப்பந்தம் இந்தியா உட்பட சில நாடுகளின் நிலைப்பாட்டால் தோல்வியில் முடிந்துள்ளது.
இதன் காரணமாக உலக வர்த்தக அமைப்பின் நிலையே கேள்விக் குறியாகியுள்ளது. கடந்த ஆண்டு இந்த ஒப்பந்தம் தொடர்பாக இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் அளித்த உறுதிமொழி பின்பற்றப்படவில்லை.
இது உலக அளவில் வர்த்தகத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்” என்று கூறியுள்ளார். உலக வர்த்தக அமைப்பின் ஒப்பந்தம் தோல்வியில் முடிந்ததால், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து மற்ற உறுப்பு நாடுகளுடன் பேசி முடிவு எடுக்கப்படும் என்று அமெரிக்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த விவகாரத்தில், ஆஸ்திரேலியா, பொலிவியா போன்ற நாடுகள் இந்தியாவின் கருத்தினை ஏற்றது குறிப்பிடத்தக்கது.