கோலாலம்பூர், ஆகஸ்ட் 4 – சமூக வலைத்தளமான ‘கூகுள்+’ (Google+)-ல் இருந்து புகைப்படங்களை பகிர்ந்துகொள்ளும் வசதியினை மட்டும் தனித்த சேவைப்பிரிவாக மாற்ற கூகுள் முடிவு செய்துள்ளதாக ஆருடங்கள் கூறப்படுகின்றன.
கூகுள் நிறுவனம், நட்பு ஊடகங்களில் முன்னணியில் இருக்கும் பேஸ்புக் மற்றும் டுவிட்டர் போன்றவற்றிற்கு இணையாக தனது கூகுள் + ஐ உருவாக்க கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. எனினும், பயனர்களின் எண்ணிக்கையை ஒப்பிடுகையில் பேஸ்புக் மற்றும் டுவிட்டர் இரண்டும் கூகுள் + ஐ விட பன்மடங்கு முன்னிலையில் உள்ளன. இவைகளின் வெற்றிக்கு முக்கிய காரணமாக கருதப்படுவது, புகைப்படங்களை பயனர்களுக்கு இடையில் பகிர்ந்து கொள்ளும் வசதி தான்.
இதனை கருத்தில் கொண்டு கூகுள் நிறுவனம், கூகுள் + ன் புகைப்படங்களுக்கான வசதியினை மட்டும் தன்னிச்சையான ஊடகமாக உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாக கூகுள் வட்டாரங்கள் கூறுகின்றன. எனினும் அதிகாரப்பூர்வமான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. ‘கூகுள்+ ஃ போடோஸ்’ (Google+ Photos) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வசதியின் மூலம் பயனர்கள் கூகுள் + ல் தனித்த கணக்குகள் ஏதும் இல்லாமலே புகைப்படங்களைப் பகிர்ந்து கொள்ள முடியும்.
இந்த கூகுள்+ ஃ போடோஸ் வசதியின் மூலமாக பயனர்கள் தங்கள் புகைப்படங்களை இணையம் வழியாக எங்கிருந்து வேண்டுமானாலும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவோ, மாறுதல் செய்யவோ முடியும்.
கூகுளின் இந்த முயற்சி நடைமுறைக்கு வரும் என்று உறுதியாக கூறமுடியாவிட்டாலும், பேஸ்புக் நிறுவனம் புகைப்படங்களை பகிர்ந்து கொள்ளும் ‘இன்ஸ்டாகிராம்’ (Instagram) செயலியினை, கடந்த 2012-ம் வருடமே வாங்கி, புகைப்படங்களை பகிர்ந்து கொள்வதற்காக தன்னிச்சையான செயலியாக உருவாக்கியது போல், கூகுளும் கூகுள்+ ஃ போடோஸ் வசதியினை விரைவில் செயல்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.