கோலாலம்பூர், ஆகஸ்ட் 6 – ‘மைந்தன்’ திரைப்படத்தை வெற்றிகரமாக உருவாக்கிய மன திருப்தியில் உற்சாகமாகப் பேசுகிறார் குமரேசன். தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர் என மைந்தனில் தனது பன்முகங்களை வெளிப்படுத்தியிருந்தாலும், சிறிதும் களைப்பு இன்றி படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியில் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தவரை செல்லியல் நேர்காணலுக்காக மாலை நேரத்தில் சற்று இளைப்பார வைத்தோம்.
பார்வையில் கூர்மை, பேச்சில் பல சுவாரஸ்யம், சிக்கென்ற உடல்வாகு என எதார்த்தமான கதாநாயகனுக்கு உரிய அத்தனை தகுதிகளையும் கொண்டிருக்கும் குமரேசன், மைந்தனுக்குப் பிறகு மலேசியாவின் ‘மோஸ்ட் வாண்டட் ஹீரோ’ பட்டியலில் இடம் பிடிக்கப்போவது நிச்சயம்.
முன்னோட்டத்திலேயே எகிறும் எதிர்பார்ப்பு
படத்தின் முன்னோட்டத்திலேயே இப்படி ஒரு ஆச்சரியத்தையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருக்கீங்களே? மைந்தன் அப்படி என்ன தான் சார் கதை? என்று போட்டு வாங்க முயற்சி செய்தோம்.
படத்தோட முன்னோட்டம் இப்படி தான் இருக்க வேண்டும் என்று, தான் முன்பே திட்டமிட்டுவிட்டதாகவும், ‘மைந்தன்’ படத்தின் முன்னோட்டம் கூட மக்களை கவர வேண்டும் என்ற நோக்கத்தில் படத்திலுள்ள முக்கியமான காட்சிகளை அந்த முன்னோட்டத்தில் வெளியிட்டிருப்பதாகவும் குமரேசன் கூறினார்.
மேலும், “ஹாலிவுட் படங்களின் முன்னோட்டங்களில் படத்தின் முக்கியமான காட்சிகளையெல்லாம் வைப்பார்கள். அதனால் மக்களுக்கு படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்படும். அதையே தான் நானும் பின்பற்றினேன்” என்றார்.
குழந்தைகள் கடத்தல் சம்பவங்கள் உலக அளவில் நடந்து வருகின்றது. மலேசியாவிலும் அது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன. எனவே அந்த கதையை மையமாக வைத்து எல்லா இன மக்களுக்கும் பொதுவாக இந்த படத்தை உருவாக்கியிருக்கின்றேன். நிச்சயமாக இது அனைவருக்கும் பிடிக்கும் என்று கூறும் குமரேசன் நம் மனதில் நம்பிக்கையை விதைக்கிறார்.
அதிகரித்துள்ள தயாரிப்பு செலவினம்
இவ்வளவு செலவு செய்து படம் தயாரித்திருக்கிறீர்களே…முந்தைய மலேசியப் படங்களின் சாதனையை ‘மைந்தன்’ முறியடிக்குமா? என்றோம்.
“மலேசிய திரையுலகத்தில் பல வெற்றிகள் புதைந்து இருக்கின்றது. நாம் தான் அதை இன்னும் தோண்டி எடுக்கவில்லை. எனக்கு நம்பிக்கை இருக்கின்றது. இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்டு இங்கே வெளியிடப்படும் ஒரு சாதாரண சராசரி படமே 2 மில்லியன் வரை வசூல் செய்கின்றது. காரணம் அந்த அளவிற்கு மக்கள் திரையரங்கிற்கு சென்று படம் பார்க்கிறார்கள். அவர்களுக்கு இந்தியா படமா, மலேசியா படமா என்ற பாகுபாடெல்லாம் கிடையாது. நல்ல தரமான படமா என்பதை மட்டுமே பார்க்கிறார்கள். 10 வெள்ளி கொடுத்து படம் பார்க்கிறார்களா? அவர்களுக்கு அந்த படம் நல்ல ஒரு பொழுதுபோக்கு அம்சத்தையும், திருப்தியையும் தர வேண்டும். அந்த மாதிரியான தரமான படங்களை எடுத்தால் நிச்சயமாக மக்கள் விரும்பி பார்ப்பார்கள்” என்றார்.
சினிமாவில் கேமெரா உதவியாளராக தனது பயணத்தை தொடங்கி, பின்னர் பாலிவுட் உட்பட பல படங்களில் பணியாற்றி, பல தொலைக்காட்சி படங்களில் நடித்து, தற்போது ‘மைந்தன்’ என்ற பெரிய அளவிலான படத்தை இயக்கி முடித்து, தன்னை ஒரு தயாரிப்பாளராக, இயக்குநராக, நடிகராக நிரூபித்திருக்கும் குமரேசனின் முயற்சி நிச்சயம் வெற்றியடையும் என்பதில் சந்தேகமில்லை.
இந்தப் படத்தில் குமரேசனுடன் டிஎச்ஆர் புகழ் புன்னகைப் பூ கீதாவும், பிரபல பாடகி ஷைலா நாயரும் இரண்டு கதாநாயகிகளாக நடித்திருக்கின்றனர்.
நாளை (ஆகஸ்ட் 7) முதல் ‘மைந்தன்’ மலேசியாவில் பெரும்பாலான திரையரங்குகளில் வெளியாகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
– ஃபீனிக்ஸ்தாசன்
குமரேசனின் முழு நீள நேர்காணலை காணொளி வடிவில் கீழே காணலாம்:-