Home நாடு பினாங்கு நிர்வாண விழாவில் பங்கேற்றவர்களில் 7 பேர் மலேசியர்கள் – காவல்துறை தகவல்

பினாங்கு நிர்வாண விழாவில் பங்கேற்றவர்களில் 7 பேர் மலேசியர்கள் – காவல்துறை தகவல்

677
0
SHARE
Ad

Penang Nude gameபாலிக் புலாவ், ஆகஸ்ட் 7 –  அண்மையில் தெலுக் காப்பியில் நடைபெற்ற நிர்வாண விழாவில் பங்கேற்ற 18 பேரில் 7 பேர் மலேசியர்கள் என நம்பப்படுகின்றது.

இது குறித்து பினாங்கு  தலைமை காவல்துறை அதிகாரி  டத்தோ வீரா அப்துல் ரஹிம் ஹனாபி கூறுகையில்,“அந்த நிகழ்வில் கலந்து கொண்டவர்களில் நான்கு பேர் சிங்கப்பூரைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவரும், இந்தியாவைச் சேர்ந்த ஒருவரும், மியன்மார் நாட்டைச் சேர்ந்தவர் இருவரும் அதில் அடக்கம். மீதமுள்ளவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என இன்னும் அடையாளம் காணவில்லை என்று தெரிவித்துள்ளார்.

“நிர்வாண விளையாட்டு நிகழ்வில் கலந்துக் கொண்ட 18 பேரில் ஒன்பது பேர் ஆண்கள்” என நேற்று பினாங்கு காவல்துறை தலமையகத்தில் நடந்த சந்திப்பில் டத்தோ வீரா செய்தியாளரிடம் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

இதுவரை இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை பத்து புகார்களை மட்டுமே பெற்றுள்ளது.

நிர்வாண விளையாட்டு பற்றிய தகவல்களை அறிந்தவர்கள் காவல் துறையின் விசாரணையை வலுப்படுத்த முன்வருமாறு பொது மக்களைக் கேட்டுக்கொண்டார்.

“நாங்கள் இன்னும் அந்த காணொளியில் உள்ள நபர்களை கண்டுபிடிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறோம்” என்றும் டத்தோ வீரா குறிப்பிட்டார்.

இது குறித்து பினாங்கு மாநில முதலமைச்சர் லிம் குவான் எங் கூறுகையில், “நிர்வாண நிகழ்வு கடந்த சில ஆண்டுகளாக வெவ்வேறு மாநிலங்களில் நடைப்பெற்று கொண்டு தான் இருக்கின்றது. ஆனால் அதை யாரும் கவனிக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

நிர்வாண நிகழ்வு நடந்த போது பணியில் இருந்த  பினாங்கு தேசிய பூங்கா காவலாளி இதனைப் பற்றிய தகவல்களை யாரிடமும் புகார் கொடுக்கவில்லை என்பதால் தற்போது அவர் விசாரணை செய்யப்பட்டு வருகின்றார்.

தேசிய பூங்காவின் மேலாண்மைக் குழு உறுப்பினர் டத்தோ ஷா ஹெடன் ஆயூப் கூறுகையில், கடந்த மே31 –ம் தேதி நடந்த இந்த சம்பவம் குறித்து காவலாளி ஏன் புகார் செய்யவில்லை என விசாரணை நடைபெற்று வருவதாகவும், அவரின் புகாருக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், காவலாளி கடற்கரையில் நிர்வாணமாக நிற்க அனுமதி  இல்லை என்று பலமுறை கூறியதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

எனினும், அவர்கள் காவலாளியின் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல், அவரை கேலி செய்து மிரட்டியதால், காவலாளி புகார் செய்யவில்லை என நம்பப்படுகிறது.

‘பினாங்கு நிர்வாண விளையாட்டு 2014” என்ற பெயரில் ஆறு பெண்கள் உட்பட 18 பேர் பங்கேற்ற அந்த நிர்வாண நிகழ்வின் காணொளி அண்மையில் நட்பு ஊடகங்களில் பகிரப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்த ஐந்து நிமிட காணொளியில், நிர்வாண உடலில் ஓவியம் வரைதல்,  குழுவாக நண்டு நடை நடத்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்ட காட்சிகள் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.