மாஸ்கோ, ஆகஸ்ட் 8 – அமெரிக்காவின் முன்னாள் உளவாளியான எர்வர்ட் ஸ்னோடென், ரஷ்யாவில் தங்குவதற்கு மேலும் மூன்று ஆண்டுகள் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஆணையை அந்நாட்டு அரசு வழங்கியுள்ளது.
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு அமைப்பின் (என்எஸ்ஏ) இரகசியங்களை அம்பலப்படுத்திய அந்த அமைப்பின் முன்னாள் உளவாளி எர்வர்ட் ஸ்னோடெனை கைது செய்வதற்கு அமெரிக்கா பல்வேறு முயற்சிகளை செய்தது.
அமெரிக்காவின் பிடியிலிருந்து தப்பிய ஸ்னோடென் கடந்த ஆண்டு ஹாங்காங்கில் இருந்து கியூபா செல்லும் வழியில் ரஷ்யாவின் அனைத்துலக விமான நிலையத்தில் ஒருமாத காலம் தங்கியிருந்தார்.
இதனை அடுத்து ரஷ்யா அவருக்கு ஓராண்டு காலம் தாற்காலிகமாகத் தங்குவதற்கான அனுமதியளித்தது. இந்நிலையில் தற்போது அவருக்கான அனுமதியை மேலும் 3 ஆண்டுகள் நீட்டித்துள்ளது.
இதுகுறித்து ஸ்னோடெனின் வழக்கறிஞர் அனல்டோலி குசிரேனா கூறுகையில், “எட்வர்ட் ஸ்னோடென், ரஷ்யாவில் தாற்காலிகமாக தங்குவதற்கான ஓராண்டு கால அனுமதி ஆகஸ்ட் 1-ம் தேதியுடன் முடிவடைந்தது.
இந்நிலையில் அவருக்கு மேலும் 3 ஆண்டுகள் தங்குவதற்கான அனுமதியை ரஷ்ய அரசு அளித்துள்ளது. ஆனால் ஸ்னோடெனுக்கு அரசியல் ரீதியான புகலிடம் அளிக்கப்படவில்லை” என்று அவர் கூறியுள்ளார்.
உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்காவின் செயல்பாடுகளுக்கு பதிலடி தரும் விதமாகவே ரஷ்யா, ஸ்னோடெனுக்கு இந்த கால நீட்டிப்பை வழங்கியுள்ளதாக கருதப்படுகின்றது.