கோலாலம்பூர், ஆகஸ்ட் 8 – பங்குச் சந்தை வட்டாரங்கள் கடந்த சில நாட்களாக தெரிவித்திருந்த ஆரூடங்களுக்கு ஏற்ப, மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனம் (மாஸ்) கோலாலம்பூர் பங்குச் சந்தையிலிருந்து அகற்றப்பட்டு தனியார் நிறுவனமாக உருமாறும் அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது.
இந்த முடிவைத் தொடர்ந்து அந்த நிறுவனத்தின் பங்குப் பரிமாற்றங்கள் பங்குச் சந்தையில் உடனடியாக நிறுத்தப்பட்டன.
இதன் மூலம் அந்த நிறுவனத்தின் அடுத்த கட்ட மறு சீரமைப்பை எளிதாகவும் துரிதமாகவும் அரசாங்கம் மேற்கொள்ள முடியும்.
மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் 69.37% பங்குகள் வைத்திருக்கும் , அரசாங்கத்தின் முதலீட்டு நிறுவனமான கசானா நேஷனல் நிறுவனம், ஒரு பங்குக்கு 27 காசு வீதம் விலை நிர்ணயத்தில் தனக்கு உரிமை அல்லாத மற்ற பங்குகளை வாங்கிக் கொண்டு, அதன் மூலம் 100% தனது சொந்த தனியார் மய நிறுவனமாக மாஸ் நிறுவனத்தை மாற்றும்.
இந்த முடிவின் மூலம் தற்போது பங்குச் சந்தையில் உள்ள மலேசியா ஏர்லைன்சின் 1.4 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான இதர பங்குகளையும் கசானா வாங்கிக் கொள்ளும்.
அதன் பின்னர் மிகப் பெரிய அளவிலான மறுசீரமைப்புக்கும், உருமாற்றத்திற்கும் மாஸ் உள்ளாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அடுத்தடுத்து நிகழ்ந்த சில அசம்பாவிதங்களால் மாஸ் நிறுவனத்தின் பங்குச் சந்தை விலையும், அதன் நிதி நிலைமைகளும் வரலாறு காணாத அளவுக்கு சரிவை எதிர்நோக்கியுள்ளன.
அறிவிக்கப்பட்டுள்ள மறு சீரமைப்பின் மூலம், மாஸ் நிறுவனத்தின் முதலீடுகள் சரிசெய்யப்பட்டு, தனியார் நிறுனங்கள் வசம் அந்த நிறுவனத்தை அரசாங்கம் ஒப்படைக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதேவேளையில், கோடிக்கணக்கான ரிங்கிட்டை மலேசிய அரசாங்கம் இந்த மறுசீரமைப்புக்கென செலவிடும் என்றும் வர்த்தக வட்டாரங்கள் கோடி காட்டியுள்ளன.