ஒரிசா, ஆகஸ்ட் 8 – ஒரிசாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் 27 பேர் பலியாகியுள்ளனர். ஒரிசாவில் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையால், அம்மாநிலத்திலுள்ள அனைத்து பிரதான நதிகளிலும் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.
23 மாவட்டங்களில் 1,553 கிராமங்களைச் சேர்ந்த 10 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக அம்மாநில சிறப்பு நிவாரண ஆணையர் பி.கே.மொஹபத்ரா செய்தியாளர்களிடம் கூறியதாவது,
“தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த 1.40 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் தேசிய பேரிடர் நடவடிக்கைக் குழுவைச் சேர்ந்த 11 பிரிவினரும், ஒரிசா பேரிடர் அதிரடிப் படையைச் சேர்ந்த 30 குழுவினரும் நிவாரண, மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
“இது தவிர 184 நாட்டுப் படகுகளும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 27ஆக உயர்ந்துள்ளது.
மேலும், ஒரிசாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நிவாரண, மறுவாழ்வு தொடர்பாக அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்று மாநில முதல்வர் நவீன் பட்நாயக்கிடம் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதியளித்துள்ளார்.
அப்போது மீட்பு, நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்திய விமானப் படையைச் சேர்ந்த இரு ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாகவும், தேசிய பேரிடர் நடவடிக்கைக் குழுவைச் சேர்ந்த 8 பிரிவுகள் ஏற்கெனவே ஒரிசாவுக்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
இது தவிர பிரதமர் நரேந்திர மோடியையும், ராஜ்நாத் சிங்கையும், மத்திய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று தனித்தனியாகச் சந்தித்து ஒரிசா வெள்ள நிலைமை குறித்து விளக்கியுள்ளார்.