Home நாடு “வேதமூர்த்தி தனக்கு பெயர் வாங்க மஇகாவையும், பழனிவேலுவையும் வம்புக்கிழுக்க வேண்டாம்” – டத்தோ ஹென்ரி எச்சரிக்கை

“வேதமூர்த்தி தனக்கு பெயர் வாங்க மஇகாவையும், பழனிவேலுவையும் வம்புக்கிழுக்க வேண்டாம்” – டத்தோ ஹென்ரி எச்சரிக்கை

651
0
SHARE
Ad

Henry Penang 300 x200பட்டவொர்த், ஆகஸ்ட் 10 – “மலேசிய இந்திய சமுதாயம் மறந்துபோன ஒரு ‘கோச டப்பா’ என்றால் அது ஹிண்ட்ராப்பின் தலைவர் என்று கூறிக் கொள்ளும் வேதமூர்த்திதான். எல்லா விஷயத்திலும் தன்னை பூஜ்யம் என்று இதுவரை காட்டிக் கொண்டுவிட்ட வேதமூர்த்தி, மக்கள் தன்னை மறந்து விடாமல் இருக்க, இப்போது மஇகாவையும், எங்களின் தேசியத் தலைவர் பழனிவேலையும் சீண்டிப் பார்க்க முனைந்திருக்கின்றார். இத்தோடு அவர் நிறுத்திக் கொண்டு சொந்த வேலையைப் பார்ப்பது நல்லது. இல்லாவிட்டால் அவரது அண்டவாளங்களை தண்டவாளத்தில் ஏற்றி மக்களின் பார்வைக்கு வைப்போம்” என்று மஇகா மத்திய செயலவை உறுப்பினரும், பினாங்கு மாநில மஇகா தொடர்புக்குழுவின் பொருளாளருமான டத்தோ ஹென்ரி பெனடிக்ட் ஆசீர்வாதம் கடுமையான எச்சரிக்கை விடுத்திருக்கின்றார்.

மஇகா பாகான் தொகுதி காங்கிரஸ் தலைவருமான டத்தோ ஹென்ரி இன்று பத்திரிக்கைகளுக்கு விடுத்த அறிக்கையொன்றில் பழனிவேலுவைத் தற்காத்தும், வேதமூர்த்தியைக் கடுமையாக சாடியும் பின்வருமாறு தெரிவித்திருக்கின்றார்:-

Waythamurthy 300 x 200 “வேதமூர்த்தியைப் பார்த்து நான் கேட்கின்றேன். இதுவரை உருப்படியாக என்ன செய்தீர்கள்? இங்கே தெருக்களில் இறங்கி போராடிய ஹிண்ட்ராப் ஆதரவாளர்கள் கைது, நீதிமன்ற விசாரணை, சிறைக் தண்டனை, அபராதம், ஜாமீன் என பல பிரச்சனைகளில் சிக்கி அவதிப்பட்ட போது, நீங்கள் பயந்து போய், நாட்டை விட்டே இரவோடு இரவாக இலண்டனுக்கு ஓடிப் போனீர்கள்”

#TamilSchoolmychoice

“நமது பிரச்சனையை அனைத்துலகம் கொண்டு செல்கின்றேன் என்றீர்கள். இது நமது நாட்டில் நடக்கின்ற நமது குடும்பப் பிரச்சனை – நாம்தான் இங்கேயேதான் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்பது புரியாமல் இலண்டனில் உட்கார்ந்து கொண்டு அப்படி என்னதான் செய்தீர்கள்? தேசிய முன்னணி அரசாங்கத்தைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் தாறுமாறாகச் சொல்லி தாய்நாட்டிற்கே அவப்பெயரைத் தேடித்தந்த தேசத்துரோகி நீங்கள்!”

“சரி அப்படியே அனைத்துலக மன்றங்களுக்கு கொண்டு சென்று நமது இந்தியர் பிரச்சனைகளுக்கு ஏதாவது தீர்வு கண்டீர்களா என்றால் அதுவும் இல்லை. மக்கள் வாரி வழங்கிய நன்கொடைப் பணத்தில் நன்றாக உலகம் சுற்றினீர்கள்.”

இலண்டன் வழக்கு என்னவாயிற்று?

“இலண்டனில் வழக்குப் போட்டு உங்களுக்கெல்லாம் மில்லியன் கணக்கில் பிரிட்டிஷ் அரசாங்கத்திடமிருந்து பணம் வாங்கித் தருகின்றேன் என்று இலட்சக்கணக்கில் நன்கொடை வசூலித்து, அந்தப் பணத்தில் ஏகபோகமாக வாழ்ந்தீர்கள். உங்கள் பேச்சை நம்பி ஆயிரம் ஆயிரமாய் கொடுத்தவர்கள் பலர். இன்னும் பலர் தெருக்களில் இறங்கி உங்களின் ஆசைவார்த்தைகளை நம்பி போராட்டம் நடத்தி கம்படியும், கண்ணீர்ப் புகைக் குண்டுகளையும் எதிர்கொண்டனர்.”

“ஆனால், அந்த இலண்டன் வழக்கு என்னவாயிற்று? இதுவரை ஒரு தகவல் உண்டா? வசூலிக்கப்பட்ட பணம் எங்கே? அதற்குரிய கணக்குகள் எங்கே? யார் யார் வசூலித்தார்கள்?”

“இதையெல்லாம் விட்டு விட்டு இப்போது மஇகாவும் பழனிவேலுவும் செய்ததைக் குறை கூறுகின்றீர்கள்?”

“ஹிண்ட்ராப் வசூலித்த பணத்திற்கு நீ எப்படி கணக்கு கேட்கலாம் என்று என்னை யாரும் கேட்க முடியாது. காரணம் இந்தியர்களுக்கான போராட்டம் என்ற காரணத்திற்காக அந்த சமயத்தில் தோள் கொடுக்க முன்வந்த நானும் வாரி வாரி வழங்கியிருக்கின்றேன். எவ்வளவு கொடுத்தேன் என்பதை என்னிடம் இருந்து வாங்கிச் சென்ற உங்களின் ஹிண்ட்ராப் தோழர்களிடம், வேதமூர்த்தியே,  கேட்டுத்தெரிந்து கொள்ளுங்கள்.”

 நஜிப்பின் நேசக்கரங்களை ஒதுக்கித் தள்ளினீர்கள் 

mh17-najib“ஆனால், தேசிய முன்னணி அரசாங்கமும், பிரதமர் நஜிப்பும் இந்திய மக்களுக்காக ஹிண்ட்ராப்புடன் சமரசம் செய்து கொண்டனர். உங்களுக்கு செனட்டர் பதவியும், பிரதமர் அலுவலகத்தில் துணையமைச்சர் பதவியும் தந்து மரியாதை செய்தனர்.”

“அந்தப் பதவிகளில் இருந்து இதுவரை என்ன செய்தீர்கள்?”

“இன்றைக்கு இந்தியர்களுக்கு வெறும் 38 மில்லியன்தானா எனக் கூக்குரல் இடும் நீங்கள், அரசாங்கத்தில் இருந்த சமயத்தில் அதைவிடக் கூடுதலான நிதி ஒதுக்கீட்டை பிரதமரிடம் இருந்து வாங்கி சாதித்திருந்தால், உங்களை மதித்துத் தலைவணங்க நாங்கள் தயாராக இருக்கின்றோம்.”

“ஆனால், அங்கிருந்தும் ராஜினாமா செய்து விட்டு ஓடிப் போய்விட்டீர்கள்.”

“எந்த தேசிய முன்னணி அரசாங்கத்தைக் குறை கூறினீர்களோ அதே அரசாங்கத்துடன் ஒப்பந்தம் போட்டீர்கள். அந்த ஒப்பந்தத்தை செயல்வடிவமாக்க என்ன முயற்சிகள் செய்தீர்கள்? ஒன்றுமே இல்லை.”

“பல பிரிவுகளாக உடைந்து சீர்குலைந்து போன ஹிண்ட்ராப்பின் ஒரு பிரிவுக்கு மட்டும்தான் நீங்கள் தலைவன் என்பதையும் மறந்து விடாதீர்கள்.”

“உங்களுடன் போராட்டம் நடத்திய சொந்த அண்ணன் சிறையில் வாட, நீங்களோ  அரசாங்கத்துடன் அரசியல் ஒப்பந்தம் போடவும், துணையமைச்சர் பதவியை ஏற்பதிலும் நாட்டம் செலுத்தினீர்கள்”.

“இப்படி எதுவுமே செய்யாத, சாதிக்காத, எல்லாவற்றிலும் தோல்வி கண்ட நீங்கள், இப்போது எங்கே உங்களின் பெயரை மக்கள் மறந்துவிடுவார்களோ என்ற பயத்தில் பழனிவேல் மீது பாய்ந்திருக்கின்றீர்கள்”.

“அரசாங்கம் கொடுத்த பணத்திற்கு முறையாக கணக்கு காட்டி பழனிவேல் விளக்கம் தந்தவுடன், இவ்வளவுதான் கொடுத்தார்களா என பேச்சைத் திசை திருப்புகின்றீர்கள்”.

“ஏன் நீங்களும்தானே அரசாங்கத்தில் துணையமைச்சராக இருந்தீர்கள்? நீங்களும் தானே பிரதமருடன் நட்பு பாராட்டினீர்கள்? அப்போதெல்லாம் கூடுதல் நிதி கேட்க வேண்டியதுதானே?”

“உங்களுக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்புக்களை பயன்படுத்தாமல் கோட்டைவிட்டு விட்டு, இப்போது மற்றவர்கள் செய்ததைக் குறை சொல்கிறீர்கள்”.

வழக்கைச் சந்திக்கத் தயாராக இருக்கின்றோம்

“நீங்கள் மற்றவர்கள் மீது பாய்ந்தால் அனைவரும் சும்மா இருக்க வேண்டும். ஆனால் மற்றவர்கள் உங்கள் மீது பாய்ந்தால், உங்களின் முதுகில் மூட்டை மூட்டையாய் குவிந்து கிடக்கும் அழுக்கை உரித்துக் காட்டினால், வழக்குப் போடுவேன் என்று பயமுறுத்துகின்றீர்கள்”

“போர்வீரனுக்கு எப்படி போர்க்காயங்கள் சாதாரணமோ அப்படித்தான் மஇகாகாரர்கள் எங்களுக்கும். வழக்கு, நீதிமன்றம் என எல்லா வகைப் போராட்டங்களையும் எல்லா காலங்களிலும் சந்திக்க தயாராக இருப்பவர்கள் நாங்கள்.”

“எனவே, இதோடு நிறுத்திக் கொண்டு, முடிந்தால் மீண்டும் இலண்டன் சென்று முன்பு போல் ஓடி ஒளிந்து கொள்ளுங்கள். இந்தியர் பிரச்சனைகளை நாங்கள் மஇகாவினர் பார்த்துக் கொள்கின்றோம். இனியும் உங்களின் வாய்ச்சவடால்கள் தொடர்ந்தால், அடுத்து உங்களின் வண்டவாளங்களைத் தண்டவாளத்தில் ஏற்றி, உங்களின் முகத்திரையை கிழித்து நீங்கள் யார் என்பதை ஊருக்குக் காட்ட தயங்க மாட்டோம்”

இவ்வாறு டத்தோ ஹென்ரி காட்டமாக தனது அறிக்கையில் கூறியிருக்கின்றார்.