கோலாலம்பூர், ஆகஸ்ட் 11 – நடப்பு சிலாங்கூர் மந்திரி பெசார் டான்ஸ்ரீ காலிட் இப்ராகிமிற்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் சிலாங்கூர் சட்டமன்றத்தில் முன்மொழியப்படுமானால், அதனை எதிர்த்து சிலாங்கூர் மாநில தேசிய முன்னணி வாக்களிக்கும் என்றும் காலிட்டுக்கு பக்கபலமாக தேசிய முன்னணி செயல்படும் என்றும் துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொய்தீன் யாசின் அறிவித்துள்ளார்.
எந்தவித நிபந்தனைகளுமின்றி காலிம் இப்ராகிமை தேசிய முன்னணி ஆதரிக்கும் என்றும், காலிட்டுக்கு ஆதரவாகவே தேசிய முன்னணி வாக்களிக்கும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார் என பெர்னாமா செய்தியொன்று தெரிவித்துள்ளது.
பிகேஆர் கட்சியின் தலைமைச் செயலாளர் டத்தோ சைபுடின் நசுத்தியோன் மற்றும் சிலாங்கூர் ஜசெக தலைவருமான டோனி புவா இருவரும் இணைந்து விடுத்த பத்திரிக்கை அறிக்கையில், சிலாங்கூர் சட்டமன்றத்தின் அவசரக் கூட்டம் கூட்டப்பட்டு, காலிட்டுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் முன்மொழியப்பட வேண்டும் என்றும் அதன்வழி, காலிட் தனக்கு பாஸ் மற்றும் அம்னோ கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு இருக்கின்றது என்பதை அவர் நிரூபிக்க வேண்டுமென்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இன்று முன்னதாக பத்திரிக்கையாளர் கூட்டத்தைக் கூட்டிய சிலாங்கூர் மந்திரி பெசார் காலிட் இப்ராகிம் தனக்கு பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாகவும், சிலாங்கூர் சுல்தான் தான் மந்திரி பெசாராகத் தொடர ஆதரவளித்திருப்பதாகவும் அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து காலிட் சட்டமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென பிகேஆர் கட்சியும், ஜசெகவும் வற்புறுத்தியுள்ளன.