வாஷிங்டன், ஆகஸ்ட் 12 – ஈராக்கில் நிலையான ஆட்சி அமைந்தால் மட்டுமே அங்கு நிலவும் பிரச்சனைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க இயலும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.
ஈராக் பிரச்சனை தொடர்பாக அமெரிக்க மக்களுக்கு ஒபாமா அளித்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- “ஈராக் தீவிரவாதிகள் எப்ரில் நகரை கைப்பற்ற இருந்த சமயத்தில் அமெரிக்கா வெற்றிகரமாக வான்வழி தாக்குதலை நடத்தி அவர்களின் திட்டங்களை முறியடித்துள்ளது.
மேலும், அங்குள்ள குர்திஷ் படைகளுக்கு தேவையான இராணுவ ஆலோசனை மற்றும் உதவியை அதிகரிக்கவும், ஐ.எஸ்.ஐ.எஸ். படைகளை தோற்கடிக்கவும் தேவையான துரித நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம்.”
“தீவிரவாதிகளை அழிப்பது அமெரிக்காவிற்கு எளிதான காரியமாக இருந்தாலும், ஈராக்கில் பெரிதாகிக் கொண்டே வரும் சிக்கலான அரசியல் நிலவரத்துக்கு அமெரிக்க இராணுவத்தால் தீர்வு காண முடியாது.”
“ஈராக்கில் உள்ள குடிமக்களின் பாதுகாப்புக்கு உத்திரவாதம் அளிக்கவும், தீவிரவாதத்துக்கு எதிராக போராடவும், ஈராக் மக்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும்.
மிகச் சரியான அரசியல் மாற்றம் மூலமாகவே அங்கு நிலவி வரும் ஒட்டுமொத்த பிரச்சனைகளுக்கும் தீர்வு காண முடியும்” என்று கூறியுள்ளார்.
எனினும், ஈராக்கில் முக்கிய நகரங்கள் அனைத்தையும் தீவிராவதிகள் கைப்பற்றி, நூற்றுக்கணக்கான மக்களை அழித்த பிறகு, அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளுக்கு ஒபாமா உத்தரவிட்டுள்ளது நகைப்புக் குரியது என அனைவராலும் விமர்சிக்கப்படுகின்றது.