பன்னாட்டுத் தரவுகளை பரிசீலிக்கும் ‘இன்டர்நேஷனல் டேட்டா கார்பரேசன்‘ (IDC) அமைப்பு சமீபத்தில் எடுத்துள்ள கணக்கெடுப்பின் படி உலக அளவில் கடந்த மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான வர்த்தகத்தில் சுமார் 255 மில்லியன்கள் அண்டிரோய்டு திறன்பேசிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது கடந்த வருடத்தை விட 33 சதவீதம் அதிகமாகும். இதற்கு அடுத்த இடத்தை ஆப்பிளின் ஐஒஎஸ் பிடித்துள்ளது. ஆனால் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த காலாண்டில் ஆப்பிளின் வர்த்தகம் தொய்வை சந்தித்துள்ளது.
உலக அளவில் ஆப்பிளின் விற்பனை கடந்த வருடத்தின் இதே காலாண்டில் 13 சதவீதமாக இருந்தது. தற்போது 11.7 சதவீதமாகக் குறைந்துள்ளது. இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் இதுவரை விற்பனை ஆகி உள்ள ஐஒஎஸ் திறன்பேசிகள் சுமார் 35.2 மில்லியன்கள் ஆகும்.
ஆப்பிளுக்கு அடுத்ததாக ‘மைக்ரோசாஃப்ட்‘ (Microsoft) மற்றும் ‘ப்ளாக் பெர்ரி‘ (Black Berry) நிறுவனங்கள் முறையே மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களைப் பிடித்துள்ளன.
ஐடிசி கணக்கீட்டின் படி மற்ற திறன்பேசிகளைக் காட்டிலும் அண்டிரோய்டு திறன்பேசிகள் 200-க்கும் குறைவான அமெரிக்க டாலர்களில் கிடைக்கின்றது. இதுவே வாடிக்கையாளர்களை அண்டிரோய்டு திறன்பேசிகளை நோக்கி ஈர்பதற்கான காரணம் எனத் தெரிய வருகின்றது.