Home நாடு “நான் நாடு திரும்பும் வரை முடிவுகள் எடுக்காதீர்கள்” – காலிட்டுக்கு சுல்தான் உத்தரவு

“நான் நாடு திரும்பும் வரை முடிவுகள் எடுக்காதீர்கள்” – காலிட்டுக்கு சுல்தான் உத்தரவு

655
0
SHARE
Ad

Selangor Sultanஷா ஆலாம், ஆகஸ்ட் 16 – காலிட் இப்ராகிம் நிலைமை சிலாங்கூரில் ஆட்டம் காணத் தொடங்கியிருப்பதைத் தொடர்ந்து, தான் நாடு திரும்பும்வரை எந்த முடிவையும் எடுக்க வேண்டாம் என சுல்தான் அவருக்கு உத்தரவிட்டிருக்கின்றார்.

இருப்பினும் தனக்கு சிலாங்கூர் சட்டமன்றத்தில் பெரும்பான்மை இருப்பதாகவும், சுல்தானுக்கு தான் அளித்த விளக்கத்தைத் தொடர்ந்து அவர் திருப்தியடைந்துள்ளார் என்றும் காலிட் கூறினார்.

ஆகஸ்ட் 27ஆம் தேதி தான் நாடு திரும்பி சந்திக்கும் வரை மந்திரி பெசார் விவகாரம் குறித்து எந்தவித முடிவுகளும் எடுக்க வேண்டாம் எனவும் சுல்தான் கட்டளையிட்டுள்ளதாகவும் காலிட் நேற்றிரவு வெளியிட்ட அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

தான் சுல்தானைக் குழப்பியுள்ளதாகவும், அவரிடம் பொய் கூறியதாகவும் என்மீது குற்றம் சாட்டியுள்ளவர்கள் நேரடியாக அவருக்கு எழுதி விளக்கம்  தெரிவிக்கலாம் என்றும் காலிட் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டபோது கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் சிலாங்கூர் சட்டமன்றத்தைக் கலைக்கும் சாத்தியம் இருப்பதாகவும், ஆனால், சுல்தானின் ஒப்புதலுக்குப் பின்னரே அதனைச் செய்ய முடியும் என்றும் காலிட் தெரிவித்துள்ளார்.

பதவி நீக்கம் செய்யப்பட்ட ஜசெக ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ தெங் சாங் கிம், காலிட் நான்கு பாஸ் ஆட்சிக் குழு உறுப்பினர்களின் உதவியோடு, எதிர்வரும் நவம்பர் வரை சிலாங்கூர் மாநில அரசின் மந்திரி பெசாராக நீடிப்பதற்கு முயற்சி செய்கின்றார் என்றும் நவம்பரில் சட்டமன்றத்தைக் கலைத்துவிடுவார் என்றும் ஏற்கனவே குற்றம் சாட்டியிருந்தார்.

ஆனால் அதுபற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று காலிட் இப்ராகிம் கூறியுள்ளார்.

தனக்கு 30 உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதை வான் அசிசா பகிரங்கமாக உறுதிப்படுத்தியுள்ளதைத் தொடர்ந்து சிலாங்கூர் சுல்தானின் அணுகுமுறையில் மனமாற்றம் ஏற்பட்டிருக்கலாம் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.