கோலாலம்பூர், ஆகஸ்ட் 15 – அம்னோ கட்சியின் சார்பில் முன்னாள் சிலாங்கூர் மந்திரி பெசாராக இருந்த டான்ஸ்ரீ முகமட் தாயிப், தற்போது பாஸ் கட்சியில் இணைந்துள்ளார். பொதுத் தேர்தலுக்கு முன்பாக பாஸ் கட்சியில் இணைந்த அவர், தற்போது சிலாங்கூர் மந்திரி பெசார் விவகாரத்தில் அந்தக் கட்சி காட்டிவரும் மெத்தனப் போக்கையும், முடிவெடுப்பதில் தாமதம் செய்வதையும் அவர் சாடியுள்ளார்.
“அவர்கள் தாமதித்து விட்டார்கள். விருந்து முடிந்துவிட்டது. மணப்பெண்ணும் மாப்பிள்ளையும் போய்விட்டார்கள்” என அவர் விரக்தியுடன் குறிப்பிட்டுள்ளார்.
“முடிவெடுப்பதில் ஏன் இத்தனை தாமதம்? ஆகஸ்ட் 17 வரை ஏன் அவர்கள் காத்திருக்க வேண்டும்? இன்று நடப்பதை வைத்து அவர்கள் இந்நேரம் முடிவெடுத்திருக்க வேண்டும்” என்றும் அவர் இணைய செய்தித் தளமான மலேசியன் இன்சைடருக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
வான் அசிசாவுக்கு 30 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தருவதாக பகிரங்கமாக அறிவித்த பின்னரும் பாஸ் இன்னும் எதற்காக காத்திருக்கின்றது என்றும் முகமட் தாயிப் கேள்வி எழுப்பியுள்ளார்.
“அம்னோவின் 12 சட்டமன்ற உறுப்பினர்களும் காலிட்டுக்கு ஆதரவு தருவதாக அறிவித்த உடனேயே காலிட், மந்திரி பெசார் பதவியிலிருந்து நீக்கப்பட பாஸ் ஆதரவு தந்திருக்க வேண்டும். அம்னோவின் ஆதரவு என்பது மிகவும் தீவிரமாக அணுகப்பட்டிருக்க வேண்டிய விஷயம்” என்றும் முகமட் கூறினார்.
பாஸ் கட்சி உடனடியாக உறக்கம் கலைந்து மக்கள் கூட்டணி மீண்டும் சிலாங்கூர் மாநிலத்தை ஆட்சி செய்ய வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்றும் காலிட்டின் சிறுபிள்ளைத் தனமான அரசியல் கோமாளித்தனங்களால் சிலாங்கூர் மக்கள் வெறுப்படைந்து விட்டார்கள் என்றும் முகமட் தாயிப் தெரிவித்தார்.