Home நாடு “பண விவகாரத்தில் சிக்கிய – கட்சி தாவும் தவளை” – தாயிப் குறித்து மகாதீர் கிண்டல்!

“பண விவகாரத்தில் சிக்கிய – கட்சி தாவும் தவளை” – தாயிப் குறித்து மகாதீர் கிண்டல்!

824
0
SHARE
Ad

Mantan-Perdana-Menteri-Dr-Mahathir-Mohamadகோலாலம்பூர் – முன்னாள் சிலாங்கூர் மந்திரி பெசார் டான்ஸ்ரீ முகமட் தாயிப் அம்னோவில் இணைந்த அடுத்த சில மணி நேரங்களிலேயே, அந்த அறிவிப்பு குறித்து, எதிர்க்கட்சித் தலைவர்கள் தங்களின் கிண்டல்களையும், கேலிகளையும், எதிர்முனைத் தாக்குதல்களையும் தொடுக்கத் தொடங்கியுள்ளனர்.

முதல் கட்டமாக பக்காத்தான் ஹரப்பான் கூட்டணி தலைவர் துன் மகாதீர் முகமட் “முகமட் தாயிப் ஒரு பெட்டி நிறைய பணத்தோடு ஆஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டதும், அதைத் தொடர்ந்து 1997-ஆம் ஆண்டில் அவர் சிலாங்கூர் மந்திரி பெசார் பதவியில் இருந்து விலகியதும் எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது” எனக் கிண்டலாகச் சுட்டிக் காட்டினார்.

“எனக்கு ஆங்கிலம் தெரியாததால், நான் சட்டத்தைப் பின்பற்றவில்லை என முகமட் தாயிப் கூறியிருந்தார். ஆனால் அவருக்கு ஆங்கிலம் தெரியும். அந்தப் பணம் எங்கிருந்து வந்தது என்பது தெரியாது. ஆனால் அது நிறையப் பணம்” என பிரிபூமி பெர்சாத்து கட்சியின் அதிகாரத்துவ முகநூல் பக்கத்தில் வெளியிட்ட காணொளியில் (வீடியோ) மகாதீர் கூறியிருக்கிறார்.

#TamilSchoolmychoice

முகமட் தாயிப் ஆஸ்திரேலிய கைது விவகாரம்

muhammad taib-ex selangor MB1997-ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகர் விமான நிலையத்தின் வழி ஆஸ்திரேலியாவுக்குள் நுழைந்தபோது, அன்றைய காலகட்டத்தில் 1 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பல்வேறு அந்நிய நாட்டுப் பணத்தை ஒரு பெட்டியில் வைத்திருந்த காரணத்திற்காக கைது செய்யப்பட்ட முகமட் தாயிப், பின்னர் ஆஸ்திரேலியா நீதிமன்றத்திலும் குற்றம் சாட்டப்பட்டார்.

ஆஸ்திரேலியாவுக்குள் 5,000 ஆஸ்திரேலிய டாலர் மதிப்புக்குட்பட்ட அந்நிய நாணயங்களை மட்டுமே கொண்டு செல்ல முடியும் என்ற சட்டத்தை மீறியதற்காக ஆஸ்திரேலியக் குடிநுழைவுத் துறையால் குற்றம் சாட்டப்பட்ட அவர் பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.

தனக்கு ஆங்கிலம் தெரியாது எனவும் அதன் காரணமாக ஆஸ்திரேலிய விதிமுறைகளைத் தன்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றும் அவர் தனது வழக்கில் முறையிட்ட காரணத்தால் விடுதலை செய்யப்பட்டார்.

இருப்பினும், இந்த விவகாரத்தினால், அவர் தனது சிலாங்கூர் மந்திரி பெசார் பதவியை இழக்க நேர்ந்தது. அந்த காலகட்டத்தில் பிரதமராக இருந்தவர் மகாதீர்தான். மலேசியாவில் முகமட் தாயிட் மீது குற்றச்சாட்டுகள் எதுவும் கொண்டுவரப்படாத காரணத்தால், அப்போது மகாதீர் மீது கடுமையான கண்டனங்கள் முன் வைக்கப்பட்டன.

இந்த சம்பவத்தை நினைவுபடுத்தியிருக்கும் மகாதீர் “இதனால், முகமட் தாயிப் தூக்கிச் செல்லும் பெட்டிகளைச் சோதனையிட வேண்டும்” என்றும் கிண்டலாகக் கூறியிருக்கிறார். “கட்சி தாவும் தவளை” என்றும் முகமட் தாயிப்பை மகாதீர் சாடியிருக்கிறார்.

நஜிப்பின் நேற்றைய அறிவிப்பு பொதுமக்களிடத்திலும், அரசியல் ஆய்வாளர்களிடத்திலும் எதிர்மறையான கருத்துகளைத் தோற்றுவித்திருக்கின்றது.

“இன்னொரு அரசியல் தவறு” – லிம் கிட் சியாங் கிண்டல்

Lim Kit Siang-DAPஜசெக தலைவர் லிம் கிட் சியாங்கும் முகமட் தாயிப் அம்னோ திரும்புவது குறித்து கிண்டல் செய்திருக்கிறார். சிலாங்கூர் மாநிலத்தின் அடுத்த மந்திரி பெசாராக முகமட் தாயிப்பை அம்னோ நிறுத்தப் போகிறதா என்றும் அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

அம்னோவில் சிலாங்கூர் மந்திரி பெசார் பதவி முதற்கொண்டு பல்வேறு பதவி சுகங்களை அனுபவித்த பின் 2013-ஆம் ஆண்டில் பாஸ் கட்சியில் சேர்ந்த முகமட் தாயிப், பின்னர் பாஸ் கட்சி பிளவு கண்டபோது 2015-இல் பிகேஆர் கட்சியில் இணைந்தார்.

இத்தனை அரசியல் அழுக்கு மூட்டைகளை சுமந்திருக்கும் – கட்சி தாவி வந்திருக்கும் முகமட் தாயிப் – மீண்டும் அம்னோவில் இணைகிறார் என்பதற்காக, ஆர்ப்பாட்டமாக, அனைத்து அம்னோ தலைவர்களையும் கோலாலம்பூருக்கு வரச் சொல்லி பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தியிருக்கும் நஜிப்பின் நடவடிக்கை குறித்து பரவலான அதிருப்திகளும், கண்டனங்களும் எழுந்திருக்கின்றன.

அவரது அமெரிக்க வருகையினால் எழுந்த எதிர்ப்புக் குரல்களைத் திசை திருப்ப நஜிப் இவ்வாறு செய்கிறார் என்ற கருத்தும் வெளியிடப்பட்டிருக்கிறது.

-இரா.முத்தரசன்