Home நாடு நஜிப் அறிவிப்பு: இதற்குத்தானா இத்தனை ஆர்ப்பாட்டம்?

நஜிப் அறிவிப்பு: இதற்குத்தானா இத்தனை ஆர்ப்பாட்டம்?

1864
0
SHARE
Ad

muhammad taib-ex selangor MBகோலாலம்பூர் – புலி வரப் போகிறதா? சிங்கம் வரப் போகிறதா? என நாடே எதிர்பார்த்துக் காத்திருக்க – வந்தது பூனை கூட இல்லை – வெறும் எலிதான் என்பதுபோல் ஆகிவிட்டது – பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் இன்றைய பத்திரிக்கையாளர் சந்திப்பும் அதனைத் தொடர்ந்த அறிவிப்பும்!

காரணம், முன்னாள் சிலாங்கூர் மந்திரி பெசார் டான்ஸ்ரீ முகமட் தாயிப் மீண்டும் அம்னோவில் இணைகிறார் என்ற அறிவிப்பு மலேசியர்களின் எந்த ஒரு பிரிவினரையும் மகிழ்ச்சியடையச் செய்ததாகவோ – தேசிய முன்னணி பங்காளிக் கட்சிகளை துள்ளிக் குதிக்க வைத்ததாகவோ தெரியவில்லை.

மாறாகவோ, இதைக் கேட்டதும் – இதற்காகத்தானா இன்று காலை முதல் இத்தனை ஆர்ப்பாட்டமா என்ற வெறுப்பு ஒரு புறம் எழ – முகமட் தாயிப் போன்ற அரசியல் செல்வாக்கிழந்த – கடந்த காலத்தின் முறைகேடான அரசியல் மூட்டைகளை சுமந்து நிற்கும் இத்தகைய ஒரு தலைவருக்கு சிவப்புக் கம்பளம் விரிப்பதிலா – ஒட்டுமொத்த அம்னோவும் இத்தனை மகிழ்ச்சி கொள்கிறது என்பது போன்ற கேள்விகளும் எழாமல் இல்லை!

#TamilSchoolmychoice

காரணம், ஒரு காலத்தில் சிலாங்கூர் மாநிலத்தின் மந்திரி பெசாராக – அம்னோவின் வலிமை மிக்க தலைவர்களில் ஒருவராக வலம் வந்த 72 வயதான முகமட் தாயிப் -இன்றைக்கு செல்வாக்கில்லாத ஒரு தலைவராகத் திகழ்கிறார்.

அரசியல் அழுக்கு மூட்டைகளுக்குச் சொந்தக்காரர்

அம்னோவில் இருக்கும் போதே, பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள், ஆஸ்திரேலியாவுக்கு ரொக்கமாக ஆஸ்திரேலிய பணத்தை இலட்சக் கணக்கில் கொண்டு சென்றது – பின்னர் சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் பதவியை இழந்தது என பல்வேறு அழுக்கு மூட்டைகளை சுமந்து அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொண்ட அவர், பின்னர் திடீரென பாஸ் கட்சியில் இணைந்தார்.

இருப்பினும் அவரால், பாஸ் கட்சியில் தொடர்ந்து பெயர் போட முடியவில்லை.

தொடர்ந்து 2015-இல் பாஸ் கட்சிக்குள் ஏற்பட்ட பிளவைத் தொடர்ந்து முகமட் தாயிப் அமானா கட்சியில் ஐக்கியமாவார் என அனைவரும் எதிர்பார்த்திருக்க, அவரோ பிகேஆர் கட்சியில் இணைந்தார்.

இரண்டு வருடங்கள் கழிந்து தற்போது மீண்டும் அம்னோவுக்குள் அவர் திரும்புவதாக நஜிப் இன்று அறிவித்திருக்கிறார். அதைவிட ஆச்சரியம் என்னவென்றால், ஏதோ, இது ஒரு மாபெரும் தேசியப் பிரச்சனை என்பது போலவும், அம்னோவில் உற்சாகம் கரைபுரண்டோடப் போகும் செய்தி என்பது போலவும் இன்றைய பத்திரிக்கையாளர் சந்திப்பு குறித்த ஆரூடங்கள் பெரிதாகப் பேசப்பட்டன. ஆனால் இறுதியில் அனைத்தும் புஸ்வாணமாகிவிட்டன.

காரணம், சிலாங்கூர் மாநிலத்தில் சில தொகுதிகளில் – சில பிரச்சாரங்களுக்கு முகமட் தாயிப் பயன்படுத்தப்படலாமே தவிர, மாறாக, அத்தகைய பிரச்சாரங்களால் மலாய் மக்களிடையே அம்னோவுக்கான ஆதரவை அவரால் திரட்ட முடியும் என யாரும் நம்ப மாட்டார்கள்.எதிர்க்கட்சிகள் வசமிருக்கும் வாக்கு வங்கியை அவரால் பிரித்தெடுக்க முடியும் என்றும் சொல்வதற்கில்லை.

அந்த அளவுக்கு மூன்று கட்சிகள் தாவி வந்த அவரது அரசியல் செல்வாக்கு அதல பாதாளத்தில் வீழ்ந்து கிடக்கிறது.

நஜிப்பின் அமெரிக்க வருகையால் எதிர்பாராதவிதமாக அதிகரித்து வரும் எதிர்ப்பு அலைகளை – கண்டனங்களைச் சமாளிக்க – திசை திருப்ப நஜிப் மேற்கொண்ட ஒர் அரசியல் வியூகமாகவே முகமட் தாயிப்பின் அம்னோ இணைப்பு பார்க்கப்படுகின்றது.

ஆனால், அமெரிக்க வருகையால் தனக்கு எதிராக எழுந்த எதிர்ப்புக் கணைகளை முறியடிக்கக் கூடிய சரியான தற்காப்பு ஆயுதம் – முகமட் தாயிப்பின் அம்னோ இணைப்பு அல்ல – என்பதை காலம் அம்னோவுக்கும் – நஜிப்புக்கும் உணர்த்தும்!

-இரா. முத்தரசன்