சென்னை – இன்று ஞாயிற்றுக்கிழமை ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளியேறிய ‘பிக் பாஸ்’ தொடரில் முதன் முறையாக நிகழ்ச்சி நடத்தும் கமல்ஹாசன் ‘பிக்பாஸ்’ வீட்டிற்குள் நுழைந்தார்.
இதுவரையில் அவர் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி நடத்தி வந்தாலும், அகத் தொலைக்காட்சி என அவர் அழைக்கும் தொலைக்காட்சியின் வழியேதான் பங்கேற்பாளர்களுடன் கலந்துரையாடி வந்தார். நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுபவர்களிடம் மட்டும் மேடையில் அவர்களைச் சந்தித்து உரையாடினார்.
ஆனால் இன்று முதன் முறையாக பிக் பாஸ் இல்லத்திற்குள் நுழைந்த கமல் அங்கு அனைவரிடமும் கலந்துரையாடினார்.
பின்னர் வெற்றி டிக்கட் எனப்படும் கோல்டன் டிக்கட்டை கவிஞர் சிநேகனைத் தேர்ந்தெடுத்து கமல் வழங்கினார். இதனைத் தொடர்ந்து சிநேகன் கமல் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டார்.
இதன் மூலம் இனி சிநேகன் வெளியேற்றப்பட முடியாது என்பதால், ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் இறுதிச் சுற்றுக்குத் தேர்வாகும் முதல் பங்கேற்பாளர் சிநேகன் ஆவார்.
இந்த வாரம் வெளியேற்றப்பட பரிந்துரைக்கப்பட்ட நால்வர் ஹரிஷ் கல்யாண், ஆரவ், சிநேகன், வையாபுரி ஆகியோராவர். இவர்களில் சிநேகன் கோல்டன் டிக்கட் பெற்று இறுதிச் சுற்று வரை தேர்வாகிவிட்டார். நேற்று சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஹரிஷ் இரசிகர்களால் காப்பாற்றப்பட்டதாக கமல் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் வெளியேற்றப்பட பரிந்துரைக்கப்பட்டவர்களில் எஞ்சியிருந்தவர்கள் இருவர்தான். ஒருவர் வையாபுரி மற்றொருவர் ஆரவ்!
நிகழ்ச்சியின் பாதியில் பிக் பாஸ் வீட்டில் மீண்டும் நுழைந்த கமல், இரசிகர்களால் இந்த வாரம் வெளியேற்றப்படுபவர் வையாபுரி என அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து இந்த வாரம் வையாபுரி பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
-செல்லியல் தொகுப்பு