இஸ்லாமாபாத், ஆகஸ்ட் 16 – பாகிஸ்தானில் இரண்டு விமானப்படை தளங்களை கைப்பற்ற முயன்ற தீவிரவாதிகளின் சதி முறியடிக்கப்பட்டது.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தின் தலைநகரான் குவெட்டாவில் உள்ள சமுங்லி மற்றும் காலித் ஆகிய விமானப்படை தளங்களை 10 பேர் கொண்ட தீவிரவாதிகளின் குழு நேற்று காலை கைப்பற்ற முயன்றது.
அப்போது இராணுவத்துக்கும் தீவிரவாதிகளுக்கும் ஏற்பட்ட சண்டையில் இராணுவத்தினரால் தீவிரவாதிகள் 10 பெரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இது குறித்து பாகிஸ்தான் இராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில், “நேற்று காலை இராணுத்தினரின் பாதுகாப்பையும் மீறி விமானப்படைத் தளத்துக்குள் நுழைய முயன்ற இரு தீவிரவாதிகள் தற்கொலைப் படையாக மாறி, தங்களின் உடலில் பாதுக்கி இருந்த குண்டுகளை வெடிக்கச் செய்தனர்.
இதனால் பாதுகாப்பிற்கு நின்றிருந்த இராணுவத்தினர் நிலை குலைந்தனர்.” “இதனை சாதகமாக்கிக் கொண்ட அவர்கள் உள்ளே நுழைய முயன்றனர். எனினும் அவர்கள் அனைவரும் இராணுவத்தினரின் பதில் தாக்குதலால் சுட்டுக் கொல்லப்பட்டனர்” என்று கூறியுள்ளார்.
இந்த தாக்குதலுக்கு தெஹ்ரிக்-இ-தால்பான் இயக்கத்தின் கலிப் மசூத் அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. வடக்கு மற்றும் தெற்கு வசிரிஸ்தான் பகுதியில் இராணுவத்தினரால் அப்பாவி மக்கள் பலியான சம்பவத்திற்கு பலி தீர்க்கும் விதமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இது தொடரும் என்று எச்சரித்துள்ளது.