Home கலை உலகம் சுசீந்திரனின் புதிய படத்தில் வைரமுத்து, மதன் கார்க்கி, கபிலன் இணைந்து பாடல் எழுதியுள்ளனர்!

சுசீந்திரனின் புதிய படத்தில் வைரமுத்து, மதன் கார்க்கி, கபிலன் இணைந்து பாடல் எழுதியுள்ளனர்!

712
0
SHARE
Ad

சென்னை, ஆகஸ்ட் 18 – கவிஞர் வைரமுத்துவின் இரு வாரிசுகளான மதன் கார்க்கியும், கபிலனும் தங்களது தந்தையைப் போலவே திரைப்படங்களில் சிறப்பான பாடல்களை எழுதிக் கொண்டிருக்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில், சுசீந்திரன் இயக்கும் புதிய படமான ஜீவாவில், முதல் முறையாக இவர்கள் மூன்று பேரும் ஒன்றாக இணைந்து பாடல் வரிகள் எழுதியுள்ளார்கள்.

இது குறித்து மதன் கார்க்கி கூறுகையில், “அப்பா, கபிலன் மற்றும் நான் மூன்று பேரும் ஜீவா படத்தில் பாடல் வரிகள் எழுதியுள்ளோம். அப்பா மெல்லிசை பாடல் ஒன்றையும், கபிலன் பார்ட்டி பாடல் ஒன்றையும், நான் காதல் மற்றும் கதைக்கு தகுந்த 4 பாடல்களையும் எழுதியுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

Vairamuthu

(கவிஞர் வைரமுத்து தன் மகன்களான கபிலன், மதன்கார்க்கியுடன்)

இதில் ஆச்சர்யப்படும் விஷயம் என்னவென்றால், இவர்கள் மூன்று பேரும் இந்த படத்தில் பாடல் எழுதியிருப்பது பின்னர் தான் அவர்களுக்கே தெரியுமாம்.

“இது எங்களுக்கே மிகவும் ஆச்சரியமாக இருந்தது. நாங்கள் மூன்று பேரும் இதில் பணியாற்றியிருப்பது முதலில் தெரியாது. இதைப் பற்றி வீட்டிலும் நாங்கள் பேசிக் கொள்ளவில்லை. பின்னர், சுசீந்திரன் படத்தில் பாடல் எழுதப் போவதாக கபிலன் என்னிடம் கூறிய போது தான், நாங்கள் மூன்று பேரும் இந்த படத்தில் பணியாற்றியிருக்கும் விஷயம் தெரிந்தது. ஜீவா எனக்கு மிகவும் சிறப்பான ஒரு படம். காரணம் நாங்கள் குடும்பமாக இதில் மொத்தம் 6 பாடல்களையும் எழுதியுள்ளோம்” என்று மதன் தெரிவித்துள்ளார்.

இதில் கபிலன் தனது வரிகளால் சுசீந்திரனை வெகுவாக கவர்ந்து விட்டார் என்று கூறப்படுகின்றது.

“இந்த படத்தில் கபிலன் மிகவும் புதுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளார். நிச்சயம் அந்த பாடல் எல்லோரையும் கவரும்” என்று படத்தின் இயக்குநர் சுசீந்திரன் தெரிவித்துள்ளார்.