புதுடில்லி, ஆகஸ்ட் 19 – இந்தியாவின் பிரபல கோடீஸ்வரரும் சகாரா குழுமத்தின் தலைவருமான சுப்ரதா ராயின் தங்கும் விடுதிகளை (ஹோட்டல்) வாங்குவதற்கு புருணை சுல்தான் திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவல் ஆதாரமற்றது என சுல்தான் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பங்கு விற்பனை மூலம் முதலீட்டாளர்களிடம் இருந்து திரட்டிய 20 ஆயிரம் கோடி ரூபாயை மோசடி செய்ததாக கைது செய்யப்பட சகாரா குழுமத்தின் தலைவரான சுப்ரதா ராய் பிணையில் (ஜாமீன்) விடுவிக்க ரூ. 10 ஆயிரம் கோடி பிணைத்தொகை செலுத்த வேண்டும் என இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் அவர் பிணைத்தொகையை செலுத்துவதற்காக வெளிநாடுகளில் உள்ள தனது சொத்துக்களை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளதாகக் கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து லண்டன் மற்றும் நியூயார்க்கில் உள்ள அவருக்குச் சொந்தமான நட்சத்திர தங்கும் விடுதிகளை புருணை சுல்தான் வாங்க முடிவு செய்து அதற்கான தனது கேட்புத்தொகையை தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகின.
எனினும் ஊடகங்களில் வெளியான இந்த செய்திகளுக்கு புருணை சுல்தானின் செய்தித் தொடர்பாளர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியுள்ளதாவது:-
“சகாரா நிறுவனத்தின் சொத்துகளை வாங்க தங்கள் நாட்டு மன்னரோ, புருணை முதலீட்டு நிறுவனமோ அல்லது புருணை அரசோ எத்தகைய முயற்சிகளிலும் ஈடுபடவில்லை. ஊடகங்களில் வெளியானத் தகவல்கள் அடிப்படை ஆதாரமற்றது” என்று கூறியுள்ளார்.