பாங்கி, ஆகஸ்ட் 19 – அரசாங்கத்தை பற்றி கருத்து சொல்ல மகாதீருக்கு உரிமை உள்ளது. ஆனால் நடப்பு அரசாங்கத்தின் தலைமையை முதலில் அவர் மதிக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் சாஹிட் ஹமீடி கூறியுள்ளார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தலைவருக்கு மகாதீர் உட்பட அனைவரும் மரியாதை செலுத்த வேண்டும் என்றும் சாஹிட் குறிப்பிட்டுள்ளார்.
“மகாதீர் பிரதமராக இப்போது இருந்தால் நிச்சயம் எல்லோரிடமும் விசுவாசத்தை எதிர்பார்த்திருப்பார். அதை தான் பிரதமர் நஜிப் துன் ரசாக்கும் எதிர்பார்க்கிறார்” என்றும் சாஹிட் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.
“அன்றைய காலத்தில் சமூக வலைத்தளங்கள் இல்லை. ஆனால் இப்போது பரவலாக உள்ளன. சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவர்கள் தங்களின் சொந்த விருப்பு வெறுப்புகளின் மூலம் அரசாங்கத்திற்கு எதிராக கருத்து தெரிவிக்கிறார்கள். மகாதீர் உட்பட” என்று சாஹிட் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பல முக்கியப் பிரச்சனைகளை பிரதமர் நஜிப் துன் ரசாக் மிக மென்மையாக கையாள்கிறார் அல்லது மௌனமாக இருந்து விடுகிறார் என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் நேற்று தனது வலைத்தளத்தில் நஜிப்புக்கு எதிராக கடும் விமர்சனம் செய்தார்.
அதன் பின்னர் மகாதீர் இன்று வெளியிட்ட அறிக்கையில், நஜிப்பின் தவறுகளை புரிய வைக்கவே அவ்வாறு விமர்சனம் செய்ததாகத் தெரிவித்தார்.
இதனால் மகாதீருக்கு எதிராக தற்போது அம்னோ தலைவர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.