இந்தியா, ஆகஸ்ட் 20 – இந்தியாவின் வட மாநிலங்களை, குறிப்பாக உத்தரப் பிரதேசம், அசாம் மாநிலங்களில் ஏற்பட்டுள்ள மோசமான வெள்ளத்தில் நூற்றுக்கணக்கானோர் பலியாகியிருப்பதோடு, பல மில்லியன் கணக்கான மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கிப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும், ஜூன் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையில் பருவகால மழையினைத் தொடர்ந்து வட இந்தியாவையும், கிழக்கு மாநிலங்களையும் தாக்கும் கரைபுரண்டோடும் ஆற்று வெள்ளம் கட்டு மீறி நாட்டின் விவசாயத்தைப் பாதித்து பெரும் உயிர் சேதத்தையும், பொருள் சேதத்தையும் ஏற்படுத்துகின்றது.
வட இந்திய வெள்ள நிலைமையில் மோசத்தை விளக்கும் சில காட்சிகள்:-
எப்போதும் மனிதனை ஏற்றிச் செல்லும் சைக்கிளை ஒருநாள் மனிதனும் ஏந்திச் செல்வான்
அசாம் மாநிலத்தில் வெள்ளத்தின் மீது தனது சைக்கிளைத் தூக்கிச் செல்லும் ஒருவர்.
வெள்ளத்தில் இருந்து தப்பிக்கத் தெரிந்த காண்டாமிருகம்
அசாம் மாநிலத்தின் மோரிகோன் பகுதியில் உள்ள போபிதோரா காட்டு விலங்கின சரணாலயத்தில், வெள்ளத்தின் காரணமாக, மேடான பகுதிக்கு செல்ல முயலும் காண்டாமிருகத்திற்கு பாதுகாப்பாக வழிகாட்டும் சரணாலயப் பாதுகாவலர்.
யானையும் படகாகும்
அசாம் மாநிலம் யானைகளுக்குப் பிரபலம். அங்குள்ள காட்டிலாகா அதிகாரிகள் வெள்ளத்தைக் கடக்க யானையைப் படகாகப் பயன்படுத்தி செல்லும் காட்சி.
ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும் – ஆட்டோ வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும்
அசாம் மாநிலத்தில் ஆற்று வெள்ளத்தை கடக்க, படகில் ஆட்டோ ரிக்ஷா வண்டியை பாதுகாப்பாக இடம் மாற்றும் கிராமப்புற மக்கள். படகின்றி தப்பிக்க முயலும் வாத்துக் கூட்டம்.
வெள்ளத்துக்கு பயப்படுவதா? வெள்ள நீரில் விரைந்து வரும் பாம்புக்குப் பயப்படுவதா?
வெள்ளத்தில் வந்த பாம்பொன்றை அடித்துக் கொன்று விட்டு ஒருவர் தூக்கிப் பிடித்துள்ள பின்னணியில், அச்சத்துடன் வெள்ளத்தின் ஊடே தனது இரண்டு குழந்தைகளுடன் நடந்து செல்லும் தாய் ஒருத்தி.
கால்நடைகளையும் காப்பாற்றுவோம்
அசாம் மாநிலத்தில், ஒரு சிறிய படகில் தான் தப்பிக்கும் அதே வேளையில், தனது பசுமாடுகளையும் மேடான பகுதிக்கு கொண்டு சென்று பாதுகாக்கும் பெண்மணி.
படங்கள்:EPA