இடாநகர், ஆகஸ்ட் 26 – அருணாச்சலப் பிரதேசத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் வெள்ளம் ஏற்பட்டு ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில், கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், அங்குள்ள தூரா, சுகா நல்லா, டென்னிங், டெசு, லசபானி, டிகாரு உள்ளிட்ட பெரும்பாலான ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
ஊருக்குள் வெள்ள நீர் புகுந்ததால், பல்வேறு கிராமங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதால், ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. பயிரிடப்பட்ட விவசாய நிலங்களிலும் வெள்ளம் புகுந்து கடும் பாதிப்பை ஏற்படுத்தின.
நாளுக்கு நாள் நிலைமை மோசமாகும் என்பதால், பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். பக்லம் என்ற பகுதியில் மட்டும் 3 ஆயிரம்பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கிருந்த அரசுப்பள்ளி ஒன்று, வெள்ளத்தில் மூழ்கியது.
கடந்த 15 நாட்களாக, பக்லம் பகுதியில், வெள்ளம் சூழ்ந்துள்ளது. கடந்த 48 மணி நேரத்தில் மட்டும், அங்கு 400 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது. டம்புக் பகுதியிலும் நிலைமை மோசம் அடைந்துள்ளது. பெரும்பாலான ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் பாய்கிறது.