பிரான்ஸ், ஆகஸ்ட் 26 – பிரான்ஸ் பிரதமர் மெனுவல் வால்ஸ் தனது பதவியை திங்கள்கிழமை ராஜினாமா செய்தார். கடந்த ஏப்ரல் மாதம் மானுவல் வால்ஸ் பிரான்ஸ் பிரதமராகப் பொறுப்பேற்றார்.
அண்மைக்காலமாக அந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சி சரிந்து வருகிறது. இதுகுறித்து பொருளாதாரத் துறை அமைச்சர் ஆர்னாட் மோன்டிபர்க் அண்மையில் அளித்த பேட்டியில், புதிய பொருளாதார கொள்கைகளுக்கு அரசு மாற வேண்டிய அவசியம் எழுந்துள்ளது என்று கூறியிருந்தார்.
இந்த கருத்துக்கு பிரான்ஸ் அதிபர் பிரான்ஷுவா ஹொலாந்தே கடும் கண்டனம் தெரிவித்தார். “அமைச்சர் ஆர்னாட் மோன்டிபர்க் அரசின் பொருளாதார கொள்கைகளை விமர்சித்து அரசுக்கே எதிராக பேட்டியளித்துள்ளார்.
அவர் மஞ்சள் கோட்டை தாண்டிவிட்டார்” என்று அவர் குற்றம்சாட்டினார். மேலும் அமைச்சரவையை உடனடியாக மாற்றி அமைக்குமாறு பிரதமர் மானுவல் வால்ஸுக்கு அதிபர் பிரான்ஷுவா ஹொலாந்தே உத்தரவிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மெனுவல் வால்ஸ் தனது பதவியை திங்கள்கிழமை ராஜினாமா செய்தார்.