லக்னோ, ஆகஸ்ட் 19 – வடமாநிலங்களில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் மட்டும் 1,000க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வெள்ளத்தால் பலியானோர் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது.
உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம், அசாம், பீகார் ஆகிய வடமாநிலங்களில் 2 நாட்கள் தொடர் கனமழை கொட்டியது. மேலும், நேபாள நாட்டில் பெய்த கனமழையால் அங்குள்ள பலுபாங்க், பைரவா, குசும், சிசபானி ஆகிய அணைகள் நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது.
இந்த நீர் உத்தரப் பிரதேசத்தின் வழியாக ஓடும் காக்ரா, சரயு, ராப்தி, கண்டாக் மற்றும் பல்வேறு ஆறுகளில் கலப்பதால் இப்பகுதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. பல இடங்களில் அபாய அளவையும் கடந்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
உத்தரப் பிரதேசத்தில் 1000-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பஹ்ரைச், சர்வஸ்தி, கோண்டா, பல்ராம்பூர், லஹிம்பூர், பாராபன்கி, சிதாபூர், பைசாபாத் மற்றும் அசம்கர் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில் வெள்ளத்தால் 13 பேர் பலியாகியுள்ளனர். உத்தரப் பிரதேசத்தில் பலியானோர் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் வெள்ளம் சூழ்ந்த கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்படுகிறது.
தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காக்ரா, ராப்தி, சாரதா உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல கிராமங்களும் துண்டிக் கப்பட்டுள்ளன.
உத்தரகாண்ட்டிலும் கங்கை, நந்தாகினி, பிந்தர் உள்ளிட்ட முக்கிய ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இங்கு கனமழையாலும், நிலச்சரிவாலும் பலியானோர் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது.
பீகாரில் நேற்றும் கனமழை பெய்தது. இங்கு பாட்னா, கோபால்கன்ச், கிழக்கு சாம்பரன், ஷேக்புரா ஆகிய 4 மாவட்டங்களிலும் நேற்று வெள்ளம் ஏற்பட்டது. இம்மாநிலத்தில் மொத்தம் 13 மாநிலங்கள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளன.
525 கிராமங்களில் வசிக்கும் 5.8 லட்சம் மக்கள் தவித்து வருகின்றனர். பலரும் வீடுகளை இழந்துள்ளனர். முன்னாள் முதல்வர் நிதிஷ்குமாரின் சொந்த ஊரான நாளந்தாவின் பெல்சி கிராமம் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது.
இதனால், மேற்கு வங்கத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் பீகார் விரைந்துள்ளனர். 38,000 மக்கள் வீடுகளை இழந்து 75 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இங்குள்ள கோசி, குண்டாக், சோனே ஆகிய முக்கிய ஆறுகளில் வெள்ளம் அபாய கட்டத்தை விட குறைந்துள்ளதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
487 படகுகள் மூலம் மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அசாமில், தீமஜி, சோனித்பூர், நகோன், திப்ருகர் ஆகிய மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
கசிரங்கா, போபிதோரா, துத்வா உள்ளிட்ட தேசிய சரணாலயங்களும் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட் டுள்ளன. அசாமில் இதுவரை வெள்ளத்துக்கு 14 பேர் பலியாகி உள்ளனர். 4 மாநிலங்களிலும் மொத்தம் 53 தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.