கோலாலம்பூர், ஆகஸ்ட் 19 – எம்எச்370 விமானப் பயணிகள் சிலரின் வங்கிக் கணக்குகளில் இருந்து சுமார் 110,600 ரிங்கிட் திருடப்பட்ட விவகாரத்தில், வங்கி பெண் அதிகாரி ஒருவரையும், அவரது கணவரையும் காவல்துறை கடந்த வாரம் வியாழக்கிழமை கைது செய்தது.
இந்நிலையில் இந்த குற்றத்தில் தொடர்புடைய பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒருவரையும் காவல்துறை தீவிரமாகத் தேடி வருகின்றது.
இது குறித்து கோலாலம்பூர் குற்றப்புலனாய்வு துறையின் துணை ஆணையர் இஸானி அப்துல் கானி கூறுகையில், “கார் பழுதுபார்க்கும் கடையில் வேலை செய்து வந்த பாகிஸ்தானை சேர்ந்த அலி பரான் என்பவரை காவல்துறை தீவிரமாகத் தேடி வருகின்றது.” என்று தெரிவித்துள்ளார்.
அப்துல் கானியின் வங்கி கணக்கிற்கு 35,000 ரிங்கிட்டை, வங்கி அதிகாரி இணைய பணப்பறிமாற்றம் மூலம் அனுப்பியுள்ளார்.
அது மட்டுமின்றி மேலும் நான்கு பேரின் வங்கிக் கணக்குகளுக்கும், வங்கி அதிகாரி பணப்பறிமாற்றம் செய்துள்ளார்.
எம்எச்370 விமானத்தில் பயணம் செய்தவர்களில் சீனாவைச் சேர்ந்த இரண்டு பயணிகளின் கணக்கிலும், மலேசியாவைச் சேர்ந்த விமானப் பணியாளர் மற்றும் மற்றொரு பயணி என மொத்தம் நான்கு பயணிகளின் கணக்கில் இருந்து 110, 600 மலேசிய ரிங்கிட் திருடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இக்குற்றத்தை புரிந்த வங்கி அதிகாரி நாட்டின் முன்னணி வங்கிகளுள் ஒன்றான எச்எஸ்பிசி வங்கியில் பணிபுரிந்துள்ளார்.
இது குறித்து எச்எச்பிசி வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த சம்பவம் குறித்து பயணிகளின் குடும்பத்தினரிடமும், பொதுமக்களிடமும் வங்கி மன்னிப்பு கேட்டுக்கொள்கிறது. நிச்சயமாக பயணிகளின் பணம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்படும்” என்று தெரிவித்துள்ளது.