கவுகாத்தி, செப்டம்பர் 24 – வடகிழக்கு மாநிலங்களான அசாம், மேகாலயாவில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 53 பேர் பலியாகி உள்ளனர். 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வடகிழக்கு மாநிலங்களான அசாம், மேகாலயாவில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், இரு மாநிலங்களிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு வரை அசாமின் கவுகாத்தியில் 162.56 மிமீ மழை பதிவாகி உள்ளது.
அசாமில் இதுவரை மழைக்கு 8 பேர் பலியாகி உள்ளனர். மேகாலயாவில் மழை மற்றும் நிலச்சரிவால் 21 பேர் இறந்துள்ளனர். மேலும் 24 பேர் மாயமாகி உள்ளனர். மீட்பு பணியில் இந்திய விமானப்படை, தேசிய பேரிடர் மீட்பு குழு, எல்லை பாதுகாப்பு படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.
மேகாலயாவில் காரோ மலைப்பகுதியில் அமைந்துள்ள 3 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இங்கிருந்து மக்கள் 29 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. சுமார் 3 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.
மீட்கப்பட்ட மக்களுக்கு வேண்டிய நிவாரண உதவிகள் வழங்கவும், பாதிக்கப்பட்டோரை மீட்க துரித நடவடிக்கை எடுக்கவும் மாநில முதல்வர் முகுல் சங்மா உத்தரவிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட பகுதிகளை அவர் விமானம் மூலம் நேற்று ஆய்வு செய்தார். இதே போல, அசாம் மாநிலத்தில் கவுகாத்தி உட்பட பல மாவட்டங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
சுமார் 50,000 மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநில முதல்வர் தருண் கோகாய் உயர் அதிகாரிகளுடன் அவரச ஆலோசனை கூட்டம் நடத்தி, மீட்பு பணிகளை முடக்கி விட்டுள்ளார்.
இதற்கிடையே, அடுத்த 24 மணி நேரத்துக்குள் மேகாலயாவில் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்துள்ளதால், அசாம், மேகாலயா மக்கள் அச்சத்தில் உள்ளனர்.