கோலாலம்பூர், ஆகஸ்ட் 20 – இந்தோனேசியாவில் பயிர்கள் உற்பத்தியில் வெளிநாட்டு நிறுவனங்களுக்கான 95 சதவீத இட ஒதுக்கீட்டை 30 சதவீதமாக குறைக்கும் புதிய தீர்மானம் நடைமுறைக்கு வர இருப்பதால், மலேசிய பயிர் உற்பத்தி நிறுவனங்கள் கடுமையான பாதிப்புக்கு ஆளாகும் எனத் தெரிய வந்துள்ளது.
இந்தோனேசியாவில் பயிர்கள் உற்பத்தியில் பெரும்பாலான பங்கினை மலேசிய நிறுவனங்கள் வகிக்கின்றன. அவற்றில் ‘கோலாலம்பூர் கேபாங்‘ (KLK), ‘கெந்திங் பிளாண்டேசன்‘ (Genting Plantation) , ‘ஐஜெஎம் பிளாண்டேசன்‘ (IJM Plantation) போன்றவை குறிப்பிடத்தக்க நிறுவனங்களாகும்.
இந்தோனேசியாவின் பயிர்கள் உற்பத்தியில் மேற்கூறிய நிறுவனங்கள் மட்டும் அல்லாது பெரும்பான்மையான மலேசிய நிறுவனங்கள் வர்த்தகம் செய்து வருகின்றன. இந்நிலையில் பயிர்கள் உற்பத்தியில் வெளிநாட்டு நிறுவனங்களை குறைக்கும் இந்த புதிய சட்டம் நடைமுறைக்கு வந்தால், அதனை சார்ந்து இயங்கி வரும் மலேசிய நிறுவனங்கள் பெரும் பொருளாதார பாதிப்புக்கு உள்ளாகும்.
இது பற்றி யுஒபி கெஹியான் ஆராய்ச்சி அமைப்பு கூறுகையில், “இந்தோனேசியாவில் விரைவில் நடைமுறைக்கு வர இருக்கும் இந்த புதிய சட்டம், மலேசிய பயிர்கள் உற்பத்தி நிறுவனங்களில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தும்” என்று தெரிவித்துள்ளது.
எனினும் இது பற்றி வர்த்தக ஆய்வாளர்கள் கூறுகையில், “இந்தோனேசியாவில் பயிர்களுக்கான குறிப்பிட்ட அந்த சட்டம் தற்போது பரிந்துரையின் பேரில் மட்டுமே உள்ளது. புதிய சட்டத்தை நடைமுறைப்படுத்த போதுமான கால அவகாசம் இருக்கின்றது” என்று கூறியுள்ளனர்.
தற்போதய நிலையில், மலேசிய நிறுவனங்கள் இந்தோனேசிய நிறுவனங்களுடன் கூட்டு ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டால் மட்டுமே பெரும் பாதிப்புகளில் இருந்து தப்பிக்க முடியும் என வர்த்தக நிபுணர்கள் கூறுகின்றனர்.