கொழும்பு, ஆகஸ்ட் 20 – இலங்கையில் மனித உரிமை மீறல் குறித்து விசாரணை நடத்த வரும் ஐ.நா. மனித உரிமை குழுவிற்கு, விசா வழங்க இலங்கை அதிபர் ராஜபக்சே திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இலங்கையில் 2009 – ம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கும், இராணுவத்திற்கும் இடையே நடந்த இறுதி கட்ட போரில், ஏராளமான விடுதலைப்புலிகளும், ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களும் கொல்லப்பட்டனர்.
இந்த போரின் போது இலங்கை இராணுவம் மனித உரிமை மீறல் செயல்களை செய்துள்ளதாகவும், இதற்கு இலங்கை அரசும் துணை புரிந்துள்ளதாகவும் அமெரிக்கா, கனடா உள்ளிட்ட ஏராளமான நாடுகள் குற்றம் சாட்டின.
மேலும், இது குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்த ஐ.நா. சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் ஐ.நா சபையினால் நியமனம் செய்யப்பட்ட வல்லுநர்கள் கொண்ட குழு விரைவில் இலங்கை சென்று விசாரணை நடத்த உள்ளது.
இதனைக் கடுமையாக எதிர்த்துள்ள இலங்கை அதிபர் ராஜபக்சே, “ஐ.நா. விசாரணைக் குழு இலங்கைக்குள் நுழைய அனுமதிக்க முடியாது” என திட்ட வட்டமாகத் தெரிவித்துள்ளளார்.
மேலும், அக்குழுவினர் இலங்கைக்கு வர விசா வழங்க மாட்டோம் என்றும் கூறியுள்ளார். எனினும் உலக நாடுகள் ஐ.நா. விசாரணைக் குழுவிற்கு ஒத்துழைப்பு அளிக்கும்படி இலங்கையை வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.