சென்னை, ஆகஸ்ட் 21 – நவீன தமிழ் இலக்கியத்தின் கவனிக்கத்தக்க எழுத்தாளர்களில் ஒருவர் மனுஷ்ய புத்திரன். இந்தியாவின் தமிழ் தொலைக்காட்சி அலைவரிசைகளில் எந்த ஒரு தலைப்பிலான விவாதமானாலும், அங்கு தவறாமல் மனுஷ்ய புத்திரனும் இருப்பார்.
மொழி, இலக்கியம், சினிமா, சமூகம், அரசியல் என பல்வேறு தளங்களில் எந்த விவாத மேடை தொலைக்காட்சியில் அரங்கேறினாலும், தவறாது இடம் பெற்று வரும் மனுஷ்ய புத்திரன்,
அண்மையில் தனது தொலைக் காட்சி விவாதத்தின்போது தனக்கு நேர்ந்த அனுபவத்தை பின்வருமாறு நகைச்சுவையோடும், நக்கலோடும், தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்திருக்கின்றார்,
படித்துப் பாருங்கள். நிச்சயம் ரசிப்பீர்கள்:-
“நேற்று ஒரு பிரபல தொலைக்காட்சியில் விவாதத்திற்கு போயிருந்தேன். ஒரு இந்து முன்னணிக்காரரும் அழைக்கப்பட்டிருந்தார். அவருக்குப் பாதுகாப்பாக ஒரு ஆயுதம் ஏந்திய காவலரும் வந்திருந்தார்.
பொதுவாக போலீஸ் பாதுகாப்புடன் வருபவர்கள் போலீசை ஸ்டுடியோவிற்குள் அழைத்துவர மாட்டார்கள். ஆனால் நேற்று ஆயுதம் ஏந்திய காவலர் ஸ்டுடியோவிற்குள் வந்துவிட்டார். வந்தது மட்டுமல்ல, நான் உட்கார்ந்திருந்த நாற்காலிக்கு நேர் எதிரே வேறு அமர்ந்துவிட்டார். அவர் இடுப்பில் பளபளக்கும் கறுப்பு பிஸ்டல்.
இந்து முன்னணிக்காரரோ என்னை பயங்கரமாக கோபப்படுத்துகிறார். எனக்கும் கோபம் வருகிறது. ஆனால் எதிரே பிஸ்டலுடன் பாதுகாவலர். என் கோபத்தை அடக்கிக்கொண்டு பேச படாத பாடு படுகிறேன்.
ஸ்டுடியோவிற்குள் இப்படி துப்பாக்கி ஏந்திய காவலரை அனுமதிப்பது என் கருத்து சுதந்திரத்தின் மீதான அச்சுறுத்தலாகப் பார்க்கிறேன். மேலும் துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பயப்படாமல் கருத்துகளை சொல்லும் அளவிற்கு நான் இன்னும் தயாராகவில்லை என்பதையும் இந்த இடத்தில் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
நான் பேசும்போது கொஞ்சம் முன்னபின்ன பேசுவேனே தவிர இதுவரை யார்மீதும் சிறு வன்முறையும் பிரயோகித்ததில்லை.
எனவே என்னுடன் விவாதத்தில் ஈடுபடுபவர்கள் இவ்வளவு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டாம் என்பதையும் தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.”
இவ்வாறு மனுஷ்யபுத்திரன் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.