டெல்லி, ஆகஸ்ட் 22 – இந்தியாவில் சிகரெட், புகையிலை பயன்பாட்டை முடக்கும் வகையில் சட்டத்தை கடுமையாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது.
நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தாக்கல் செய்த முதல் பட்ஜெட்டில், சிகரெட் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்த்தப்பட்டது. தற்போது, நாடு தழுவிய புகையிலை பொருட்களின் தடைக்கு மோடி அழைப்பு விடுத்துவருகிறார்.
சிகரெட் பயன்பாட்டை முடக்குவதற்காக, 2003-ம் ஆண்டு புகையிலை மற்றும் சிகரெட்டுகள் சட்டம் (காப்டா) மத்திய நலத்துறை அமைச்சகத்தால் மறு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதை கடுமையாக்கும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது.
இதற்கான அறிக்கை மற்றும் பரிந்துரைகள் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் முன்வைக்கப்படும் என்று கூறப்படுகிறது. புதிய பரிந்துரைகளில் புகையிலை உபயோகத்திற்கான குறைந்தபட்ச வயது 18லிருந்து 25 ஆக உயர்த்துதல்,
அனைத்து சிகரெட்டு மற்றும் புகையிலை பாக்கெட்டுகளிலும் எச்சரிக்கை படத்தை அச்சிடுதல், பொது இடங்களில் புகைப்பிடித்தால் விதிக்கப்படும் அபராதத்தை உயர்த்துதல், கடைகளுக்கு அருகில் புகையிலை விளம்பரங்களை தடை செய்தல் போன்றவை இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், முன்பு போல் இல்லாமல் இந்த தடைகளை சரியாக பின்பற்றுகிறார்களா என்பதை சோதனையிடவும் நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளது மத்திய அரசு.